புதுக்கோட்டையில் பெண் ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 91 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டுபுதுக்கோட்டை அருகே ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 91 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை திருவப்பூர் சவுராஷ்டிரா பெரிய தெருவில் வசிப்பவர் ராமமூர்த்தி. இவர் நமணசமுத்திரத்தில் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பூரணவள்ளி. இவர் புதுக்கோட்டை நகராட்சியில் நிதி ஆதார துறையின் ஆடிட்டராக பணி புரிந்து வருகிறார். இந்த தம்பதியினர் புதுக்கோட்டையில் உள்ள வீட்டை பூட்டி விட்டு கடந்த ஒரு மாதமாக நமணசமுத்திரம் கிராமத்தில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று திடீரென இங்குள்ள வீட்டுக்கு வந்த பூரணவள்ளி வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 91 பவுன் நகைகள் மற்றும் சுமார் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு பூரணவள்ளி தகவல் கொடுத்தார். அதன்பேரில், புதுக்கோட்டை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் மற்றும் திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், நகை கொள்ளை போன வீட்டில் கடந்த சில மாதங்களாக யாரும் இல்லை. பூர்ணவள்ளியின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதால் அனைவரும் நமணசமுத்திரம் வீட்டில் இருந்துள்ளனர். கடைசியாக திருவப்பூர் தேர்த்திருவிழாவின்போது இந்த வீட்டுக்கு வந்திருக்கின்றனர். கடைசியாக பூரணவள்ளியின் கணவர் ராமமூர்த்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு வந்துள்ளார். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை விரைவில் பிடித்து விடுவோம் என்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து பூர்ணவள்ளி கொடுத்த புகாரின்பேரில் திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments