கீரமங்கலம் பகுதியில் காற்றில் சாய்ந்த வாழை, பலா மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!கீரமங்கலம் பகுதியில் காற்றில் சாய்ந்த வாழை, பலா மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கீரமங்கலம், செரியலூர், கொத்தமங்கலம், மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் கொத்தமங்கலம் உள்பட பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான வாழை, பலா, மா மரங்கள், எலுமிச்சை மற்றும் மிளகாய் செடிகள் சாய்ந்து பலத்த சேதமடைந்துள்ளது.

மேலும், மழைத்தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் ஆங்காங்கே அடைப்புகள், ஆக்கிரமிப்புகள் உள்ளதால் மழைத்தண்ணீர் நீர்நிலைகளுக்கு போகாமல் சாலைகளிலேயே தேங்கியது. ஏற்கனவே கஜா புயல் தாக்கி கோடிக்கணக்கான மரங்கள் சாய்ந்து விவசாயிகளை வாழ்வாதாரம் இழக்கச் செய்திருந்த நிலையில், அடுத்த வருடமே கொரோனா ஊரடங்கால் விவசாய உற்பத்திகள் விற்கமுடியாமல் தவித்து வந்தனர். இதில் இருந்து மீண்டு வந்த விவசாயிகள் தற்போது ஒரே நாள் சூறைக்காற்றில் பல ஆயிரம் மரங்களை இழந்து மீண்டும் தவிக்கும் நிலையில் உள்ளனர்.

இது குறித்து கொத்தமங்கலம் பகுதி விவசாயிகள் துரைராசு, செல்வராசு ஆகியோர் கூறும் போது, கஜா புயல் எங்களை முற்றிலும் அழித்துவிட்டது. அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு பலாமரங்களும் துளிர்க்கத் தொடங்கி காய்க்கத் தொடங்கும் போது கொரோனா வந்து முடக்கிவிட்டது. 

இப்போது அரை மணி நேர சூறைக்காற்றில் முழுமையாக சாய்த்துவிட்டது. கடந்த 3 வருடங்களாக விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறோம். தற்போதைய இழப்புகளை வருவாய்துறை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments