புதுக்கோட்டையில் கொரோனா சிகிச்சைக்கு மீண்டும் சித்த மருத்துவ மையம்: கலெக்டர் உமாமகேஸ்வரி தகவல்!புதுக்கோட்டையில் கொரோனா சிகிச்சைக்கு மீண்டும் சித்த மருத்துவ மையம் தொடங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பொதுமக்கள் முக கவசம் இன்றி வெளியில் வரக் கூடாது, உணவகங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், நேரக்கட்டுப்பாட்டை கடைப்பிடித்தல், காவல்துறையினர் மூலம் ஊரடங்கை கடைப்பிடிப்பதற்கான வழிமுறைகள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தங்குதடையின்றி கிடைக்க செய்தல் போன்றவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கூடுதலான படுக்கை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் சித்த மருத்துவப் பிரிவினை மீண்டும் திறப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நாளைய தினம் முதல் (அதாவது இன்று) அரசின் அறிவிப்பின்டி கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் பணியாளர்கள் கையுறை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து வழங்கவும், வாடிக்கையாளர்கள் நேரடியாக பொருட்களை எடுக்க அனுமதிக்க கூடாது எனவும் வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களிலும் உள்ளே வரும் பொதுமக்களுக்கு கிருமிநாசினி திரவம் வழங்க வேண்டும். முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதன் மூலம் மறுமுறை தவறாமல் முககவசம் அணிவார்கள் என்பதனால் அபராத நடைமுறை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 45 வயதுக்கும் மேற்பட்டவர்களில் இதுவரை 11 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 58 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கோவேக்சின் 4 ஆயிரத்து 240 டோஸ், கோவிஷீல்டு தடுப்பூசி 5 ஆயிரத்து 800 டோஸ் எண்ணிக்கையிலும் கையிருப்பு உள்ளன.

எனவே 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றிற்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், இணை இயக்குனர் (ஊரக நலப்பணிகள்) ராமு, பொது சுகாதார துணை இயக்குனர்கள் கலைவாணி, விஜயக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments