புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 12 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்!புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 12 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டுகள் பதிவான மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. துணை ராணுவ படையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர வேட்பாளர்களின் முகவர்களும் இரவு, பகலாக வாக்கு எண்ணும் மையத்தில் அமர்ந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை பார்த்து வருகின்றனர். ஓட்டு எண்ணிக்கை நாளான மே 2-ந் தேதியை அனைவரும் எதிர்நோக்கி உள்ளனர்.

இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் திருமயம் சட்டமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பகுதியில் ஒரு கேமராவில் காட்சிகள் தெரியவில்லை என தி.மு.க. தரப்பில் புகார் தெரிவித்தனர். மேலும் வாக்கு எண்ணும் மையத்தின் பின்பகுதியை கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கல்லூரியின் பின்பகுதியையும் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- வாக்கு எண்ணும் மையத்தில் மொத்தம் 223 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தற்போது கூடுதலாக 12 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தி.மு.க.வினர் தெரிவித்த கோரிக்கைகளின் படியும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

திருமயம் சட்டமன்ற தொகுதி ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் பழுதில்லை. அந்த பகுதி முழுவதையும் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து கேமராக்களிலும் பதிவாகும் காட்சிகளை பார்வையிட மொத்தம் 18 இடங்களில் `டிஸ்பிளே' வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments