பாம்புக்கடியால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய 2 குழந்தைகளை காப்பாற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சாதனை



புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் கோட்டைகாலனியை சேர்ந்தவர் அருளானந்த ஜெரோம் (வயது 14). இவரது தங்கை டெல்பின் ஜொவிதா (8). சம்பவத்தன்று இருவரும் வீட்டில் இரவு தூங்கி கொண்டிருந்தனர். அப்போது கண்ணாடி விரியன் பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களை குழந்தை மருத்துவ நிபுணர்கள் வசந்த்குமார், ஆசைதம்பி, பொது மருத்துவ நிபுணர்கள் ஜோதி, ஆனந்த், மயக்க டாக்டர்கள் கார்த்திகேயன், டேனியல் ஆகியோர் கொண்ட மருத்துவ குழு பரிசோதித்த போது இருவருக்கும் ரத்தம் உறையும் தன்மை குறைந்த நிலையிலும், நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதையும் கண்டறிந்தனர். 

2 பேருக்கும் விஷ முறிவு மருந்து அளிக்கப்பட்டது. இருப்பினும் நரம்பு மண்டல பாதிப்பின் காரணமாக இருவருக்கும் நுரையீரல் செயலிழந்ததால் உடனடியாக வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

மருத்துவக்குழுவினரின் தீவிர சிகிச்சையின் காரணமாக மூச்சு திணறல் 5 நாட்களுக்கு பிறகு சீரானதை அடுத்து செயற்கை சுவாசம் படிப்படியாக நீக்கப்பட்டு கண்காணிக்கபட்டனர். 2 வார சிகிச்சைக்கு பின்பு இரு குழந்தைகளும் எவ்வித பாதிப்பும் இன்றி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரையும் உரிய நேரத்தில் விரைவாக தீவிர சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய டாக்டர்களையும், செவிலியர்களையும் மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி பாராட்டினார். அப்போது மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்மோகன், துணை முதல்வர் கலையரசி, நிலைய மருத்துவர் இந்திராணி மற்றும் தலைமை மயக்க மருத்துவர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி கூறுகையில்" ஒரே குடும்பத்தை சேர்ந்த பாம்புக்கடியால் உயிருக்கு போராடிய 2 குழந்தைகளையும் செயற்கை சுவாசமளித்து காப்பாற்றியது பாராட்டத்தக்கது. 

தனியார் மருத்துவமனையில் சுமார் ரூ.3 லட்சம் வரை செலவாக கூடிய இந்த சிகிச்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது" என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments