சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து; 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: மத்திய அரசு திடீர் அறிவிப்பு


சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து; 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: மத்திய அரசு திடீர் அறிவிப்பு

நாட்டில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும், 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் உச்சகட்டமாக 1.82 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்த வேண்டும் எனக் கோரி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்டு மனுக்கள் மூலம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

கரோனா காலத்தில் தேர்வுகளை எழுத மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது, தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் எழுதியிருந்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோரும் இதே கோரிக்கையை வைத்திருந்தனர்.

செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்களின் குடும்பத்தினர் யாரேனும் கரோனாவில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தால், அந்தக் குறிப்பிட்ட மாணவருக்கு மட்டும் தனியாக செய்முறைத் தேர்வு நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்திருந்தது. ஆனால், இதே நடைமுறை பொதுத்தேர்வில் கடைப்பிடிக்கப்படுமா என்பதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை.

இந்தச் சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், உயர் அதிகாரிகள் ஆகியோர் இன்று சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்குப் பின் மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. மாணவர்களுக்கு மதிப்பீடு முறையைக் கணக்கிட புதிய முறையை விரைவில் சிபிஎஸ்இ வாரியம் வெளியிடும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்கள் ஏதாவது ஒரு மாணவருக்கு மன நிறைவைத் தரவில்லை என்றால், அந்த மாணவர் தனிப்பட்ட முறையில் பள்ளிக்குச் சென்று முறையிட்டுத் தேர்வு எழுதிக்கொள்ளலாம். அதற்கான சூழல் இருந்தால் தேர்வுகள் நடக்கும்.

மே 4-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் வரை நடக்க இருந்த சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுகின்றன. ஜூன் 1-ம் தேதி சிபிஎஸ்இ வாரியம் கூடி, அப்போது நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கும். ஒருவேளை சூழல் தேர்வு நடத்த ஏதுவாக இருந்தால், 15 நாட்களுக்கு முன்பாக, தேர்வு குறித்து மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments