புனித ரமலான் காலத்தில் மசூதியில் இஃப்தார் நோன்பு திறக்க அனுமதியில்லை: கர்நாடக அரசு புதிய கட்டுப்பாடு






கரோனா வைரஸ் பரவல் காரணமாக, புனித ரமலான் காலத்தில் மசூதியில் நோன்பு திறக்க முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தொழுகைக்கு மட்டுமே வர வேண்டும் என்று கர்நாடக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை உச்சகட்டத்தில் இருந்து வருகிறது. நாள்தோறும் 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநிலங்களில் கர்நாடக மாநிலமும் ஒன்றாகும்.

முஸ்லிம் மக்களின் புனித ரமலான் நோன்புக் காலம் தொடங்கியுள்ளதை அடுத்து, அதற்குரிய கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் புனித ரமலான் காலத்திலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, முஸ்லிம்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய்கள் இருப்போர், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மசூதிக்கு வருவதைத் தவிர்த்து, வீட்டிலேயே தொழுகை நடத்த வேண்டும்.

மக்கள் கூட்டமாகக் கூடுவது தடை செய்யப்படுகிறது. சமூக விலகலைக் கடைப்பிடித்து தொழுகையை மசூதியில் நடத்த வேண்டும். மசூதியில் தொழுகை நடத்தும்போது, மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் வகையில் கட்டங்களை வரைய வேண்டும்.

முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். மசூதிக்குள் நுழையும் அனைவரையும் உடல்வெப்ப பரிசோதனை செய்து, சானிடைசர் மூலம் கைகளைச் சுத்தப்படுத்தியபின் அனுமதிக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் கூட்டமாக மசூதிக்குள் அனுமதிக்காமல், கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தி தொழுகை நடத்த வேண்டும்.

ரமலான் காலத்தில் இஃப்தார் நோன்பு திறக்க அனுமதியில்லை. முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே மாலை நேரத்திலும், அதிகாலையிலும் நோன்பு திறந்துகொள்ள வேண்டும். மசூதிக்கு தொழுகைக்கு மட்டுமே வர வேண்டும்.

ஒவ்வொரு முறையும் தொழுகைக்கு முன்பாக மசூதியைச் சுத்தப்படுத்தி, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். யாருக்கேனும் கரோனா வைரஸ் அறிகுறி இருந்தால், அவர்களைத் தனிமைப்படுத்தி , மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments