அடுத்த 7 நாட்களுக்கு 6 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பம்: பொதுமக்கள், வேட்பாளர்கள், போலீஸாருக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


அடுத்த 7 நாட்களுக்குத் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பம் 6 டிகிரிவரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள், வேட்பாளர்கள், போலீஸார் பொதுவெளியில் பகலில் உலாவுவதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''ஏப்ரல் 1 முதல் 4 வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஏப்.5 அன்று தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு

தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி வீசுவதால் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 4 வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நகபட்டினம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4-லிருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

ஏப்ரல் 5 முதல் 7 வரை கரூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 4லிருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இதன் காரணமாக ஒருசில இடங்களில் அனல் காற்று வீசக்கூடும்.

பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை திறந்த வெளியில் வேலை செய்வது மற்றும் ஊர்வலம் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

ஏப்ரல் 5 முதல் 7 வரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 லிருந்து 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு ஏதும் இல்லை.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மத்திய அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ஏற்படுகிற அந்தமான் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்''.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments