மணமேல்குடி அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தாக்கி இளைஞர் காயம்; பொதுமக்கள் சாலை மறியல்


மணமேல்குடி அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தாக்கி இளைஞர் காயமடைந்ததாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் ராமு (32). இவர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கட்டுமாவடி தோப்பு வயலில் தங்கி, கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், மணமேல்குடியில் இருந்து பட்டுக்கோட்டைக்குத் தனியார் பேருந்தில் நேற்று (ஏப்.11) இரவு ராமு பயணித்துள்ளார். அப்போது, அவர் போதையில் இருந்ததாகவும், பேருந்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, வழியில் கட்டுமாவடி சோதனைச் சாவடியில் பேருந்தை நிறுத்தி ராமுவை இறக்கிவிட்டதோடு, சம்பவம் குறித்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மணமேல்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் துரைமுருகனிடம் தெரிவித்துவிட்டு, பேருந்து ஊழியர்கள் சென்றுவிட்டனர்.

பின்னர், துரைமுருகனிடம் ராமு தகராறில் ஈடுபட்டதாகவும், அப்போது, துரைமுருகன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில், ராமுவுக்குக் காயம் ஏற்பட்டதையடுத்து மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கட்டுமாவடியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர், போலீஸார் சமாதானம் செய்து மறியலில் ஈடுபட்டோரைக் கலைந்துபோகச் செய்தனர். சாலை மறியல் போராட்டத்தால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments