கறம்பக்குடி அருகே விளக்கால் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்புகறம்பக்குடி அருகே சிம்னி விளக்கு தவறி விழுந்து தீப்பற்றியதில் கணவன்-மனைவி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது 3 குழந்தைகள் வெளியே ஓடி வந்ததால் உயிர் தப்பினர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கெண்டையம்பட்டியை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 34). இவரது மனைவி ரெஜினா பேகம் (28). இருவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண், 1 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சம்சுதீன், ரெஜினாபேகம் மற்றும் குழந்தைகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது மின்தடை ஏற்பட்டிருந்ததால் வீட்டில் உள்ள ஜன்னலில் சிம்னி விளக்கை ஏற்றி வைத்திருந்தனர். அப்போது லேசாக காற்று வீசியதால் ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த சிம்னி விளக்கு ரெஜினாபேகம் மீது விழுந்து சேலையில் தீப்பற்றி உடல் முழுவதும் பற்றி எரிந்தது. வலியால் அலறி துடித்த மனைவியை சம்சுதீன் காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் தீ பற்றி எரிந்தது. இதை கண்ட அவர்களது 3 குழந்தைகளும் அலறியவாறு வெளியே ஓடி வந்தனர்.

குழந்தைகளின் கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். பின்னர் தீயில் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சம்சுதீன், ரெஜினா பேகம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெஜினாபேகம் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தாா். இதேபோல, சம்சுதீன் நேற்று காலை இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் மழையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்கா தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தீயில் கருகி கிடந்த தாய்-தந்தையின் உடலை பார்த்து 3 குழந்தைகளும் செய்வதறியாது திகைத்து நின்ற காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. தீயில் கருகி கணவன்-மனைவி இறந்த சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments