நாளை வாக்குப்பதிவு; கரோனா பாதுகாப்பு அம்சங்கள்: வாக்களிப்பது எப்படி?- வாக்காளர்களுக்கான வழிகாட்டுதல்




தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடப்பதை ஒட்டி வாக்காளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை, முதன்முறை வாக்களிக்க செல்பவர்கள் அறிந்துக்கொள்ளும் வழிமுறைகள், கரோனாவை ஒட்டி கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முதன் முறையாக கரோனா காலத்தை ஒட்டி வாக்குப்பதிவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆரம்ப காலத்தில் காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடியும். பின்னர் அது 7 மணிக்கு தொடங்கி 5 மணி என மாற்றப்பட்டது.

பின்னர் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக 6 மணியுடன் நிறைவுப்பெறும் என மாற்றப்பட்டது. தற்போது கரோனா பரவலை ஒட்டி கூடுதலாக ஒரு மணி நேரம் கரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க ஏதுவாக காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*வாக்காளர்கள் வாக்களிக்கும்போது வீண் அலைச்சலை தவிர்க்க தங்களுக்கான வாக்குச்சாவடி பாகம் எண் உள்ளிட்டவை குறித்து முதல் நாளே அறிந்து வைத்துக்கொள்வது நல்லது. இதற்காக நமது வாக்குச்சாவடி குறித்து தேர்தல் ஆணைய தளத்தில் சென்று அறிந்துக்கொள்ளலாம். வாக்காளர் பட்டியலுடன் வாக்குச்சாவடிகள் முன் முகவர்கள் இருப்பார்கள் அவர்களிடமும் சென்று அறிந்துக்கொள்ளலாம்.

*கோடைக்காலம் என்பதால் கூடியவரை காலையிலேயே சென்று வாக்களிப்பது சிறந்தது. இதன்மூலம் வெயிலில் வாடுவதிலிருந்து தப்பிக்கலாம்.

* கையில் தண்ணீர் பாட்டில், சிறிய குடை எடுத்துச் செல்லலாம், அது நேரடி வெயிலிலிருந்து காக்க உதவும்.

* வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து செல்லவேண்டும். கையுறை மட்டுமே வாக்குச்சாவடியில் அளிப்பார்கள்.

* வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், பாஸ்போர்ட், பான்கார்டு உள்ளிட்ட ஏதாவது 11 அடையாள ஆவணங்களை கொண்டுச் செல்லலாம்.

*வாக்குப்பதிவின் போது வரிசையில் சமூக இடைவெளியுடன் நிற்க வேண்டும்.

* வாக்களிப்பதற்கு முன்பு அனைவருக்கும் Hand Sanitizer கொடுக்கப்பட்டு பின்பு தெர்மோ மீட்டர் கொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். பின்பு ஒரு Gloves ( கை உறை) வழங்கப்படும். (வலது கைக்கு மட்டும்).

*வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு நுழைவதற்கு முன்பு சானிடைசரால் கைகளை சுத்தப்படுத்திய பின் அவர்களுக்கு கையுறை (வலது கைக்கு மட்டும்) வழங்கப்படும். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வலது கை உறையை முழுமையாக அணிந்துகொண்டு முதலாம் தேர்தல் அலுவலரிடம் உங்களுக்கு வழங்கப்பட்ட பூத் ஸ்லிப் (அல்லது உங்களது பாகம் எண் வரிசை எண் விபரத்தை) கூறி வாக்காளர் அடையாள அட்டையை அல்லது வேறு ஆவணம் இருப்பின் அதை காண்பிக்க வேண்டும்.

*உங்களுடைய அடையாளத்தை உறுதி செய்த பின்பு முதலாவது தேர்தல் அலுவலர் வாக்காளர் பெயர், பாகம் எண், வரிசை எண்ணை உரத்த குரலில் சொல்வார். இதனை தேர்தல் முகவர்கள் உறுதி செய்த பிறகு நீங்கள் இரண்டாவது தேர்தல் அலுவலரிடம் சென்று 17 A ரிஜிஸ்டரில் கையொப்பமிடவேண்டும்.

* பின்னர் உங்களுடைய இடதுகை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்படும். பிறகு அவர் உங்களுக்கு ஓட்டளிக்க வாக்காளர் ஸ்லிப் வழங்குவார். அதை பெற்றுக்கொண்டு 3 வது தேர்தல் அலுவலரிடம் சென்று அந்த வாக்காளர் ஸ்லிப்பை கொடுத்த பின்பு அவர் உங்களை இவிஎம் இயந்திரம் இருக்கும் பகுதிக்கு சென்று வாக்களிக்க அனுமதி வழங்குவார்.

* நீங்கள் வாக்களிக்கும் இடத்திற்கு சென்று உங்களுடைய கையுறை அணிந்த வலது கை விரல்களால் உங்களுக்குரிய வேட்பாளர் பட்டனை அழுத்தி பீப் சத்தம் வருவதையும், வேட்பாளருக்கு அருகிலுள்ள சிகப்பு விளக்கு எரிவதையும் உறுதி செய்ய வேண்டும்.

* பின்னர் அருகிலுள்ள விவிபேட் இயந்திரத்தில் நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் சின்னம் பிரிண்ட் செய்யப்பட்டு 7 வினாடிகள் காண்பிக்கப் படுவதையும் உறுதி பார்த்து உறுதி செய்யலாம்.

*பிறகு வாக்குசாவடி மையத்தின் வெளியே வந்து நீங்கள் அணிந்துள்ள வலது கையுறையை கழட்டி அதற்குரிய பிளாஸ்டிக் குப்பை பையில் போட்டுவிட்டு வாக்குச்சாவடி மையத்தை விட்டு வெளியேறலாம்.

* வாக்காளர் உடல் வெப்பநிலை சராசரியை விட மிக அதிகமாக இருந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* வழக்கமான வாக்காளர்களுக்கு மாலை 6 மணி வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனோ வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக மாலை 6 மணிக்கு மேல் ஒரு மணி நேரம் வாக்களிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்டவர்கள் தனியே வந்து மாலை 6.00 மணி முதல் 7.00 மணி முடிய உள்ள நேரத்தில் வாக்களிக்கலாம்.

* இதற்காக கவச உடை வாக்குச்சாவடி மையத்தில் கரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியே வழங்கப்படும், அதை அணிந்து வாக்களிக்கலாம். இந்த நேரம் கரோனா அறிகுறி உள்ளவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமையில் இருப்பவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

* வாக்குச் சாவடிக்குள் வாக்குச்சாவடி தலைமை அலுவலரைத்தவிர மற்றவர்கள் (வாக்காளர்கள், முகவர்கள் உள்ளிட்ட யாரும்) செல்போன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

* வாக்காளர்களில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 கி.மீ தூரத்துக்குட்பட்ட வாக்குச் சாவடிக்குச் செல்ல ஊபெர் நிறுவனம் மூலம் தேர்தல் ஆணையம் இலவச சேவை வழங்குகிறது. இதை பயன்படுத்திக்கொள்ள முன் பதிவு அவசியம்.

பாதுகாப்புடன் வாக்களிப்போம், முகக்கவசம், சமூக இடைவெளியுடன் வாக்களிப்போம், தவறாது நமது வாக்கை செலுத்துவோம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments