புதுக்கோட்டையில் கொரோனா சிகிச்சைக்கு போதுமான படுக்கை வசதிகள்-கலெக்டர்
கொரோனா சிகிச்சைக்கு போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
காணொலியில் ஆய்வு
கொரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தலைமை செயலாளர் ராஜூவ்ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டையில் கலெக்டர் உமாமகேஸ்வரி பங்கேற்று மாவட்டத்தில் கொரோனா தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், அரசு மருத்துவக்கல்லூரி டீன் பூவதி, சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் கலைவாணி, விஜயகுமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மருத்துவமனைகள்
இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கான நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்திட போதுமான எண்ணிக்கையில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 2,060 படுக்கைகள் உள்ளன. நோய் அறிகுறிகளுடன் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 450 படுக்கைகள், அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் 70 படுக்கைகள், 12 தாலுகா அரசு மருத்துவமனைகளில் 300 படுக்கைகள், புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள், 6 தனியார் மருத்துவமனைகளில் 190 படுக்கைகள் என மொத்தம் 1,110 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அரசு மகளிர் கல்லூரி
மேலும் நோய் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 10 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 300 படுக்கைகள், குடுமியான்மலை ஸ்டாமின் வேளாண்துறை விடுதியில் 150 படுக்கைகள், புதுக்கோட்டை பிற்படுத்தப்பட்டோர் நல மாணவ விடுதியில் 125 படுக்கைகள், புதுக்கோட்டை ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் 75 படுக்கைகள், விராலிமலை ஐ.டி.ஐ.யில் 125 படுக்கைகள், அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரியில் 75 படுக்கைகள், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 100 படுக்கைகள் என மொத்தம் 950 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தொலைபேசி எண்கள்
கடந்த 3-ந் தேதி நிலவரப்படி 424 ஆக்சிஜன் வசதி படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 72 மற்றும் ஆக்சிஜன் இல்லா படுக்கைகள் 1,564 படுக்கைகள் என மொத்தம் உள்ள 2,060 படுக்கைகளில் 400 நோயாளிகள் அறிகுறிகளுடனும், 142 நோயாளிகள் அறிகுறிகள் இன்றியும் மொத்தம் 542 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சையிலுள்ள நிலையில் 1,518 படுக்கைகள் (74 சதவீதம்) காலியாக உள்ளது. மேலும் படுக்கைகள் அதிகம் தேவைப்பட்டால் அவற்றை தயார் செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் சிகிச்சைக்கான மருத்துவமனைகள் மற்றும் படுக்கை வசதிகள் குறித்த தகவல்கள் மற்றும் விவரங்களுக்கு 04322-1077, 04322-222207 மற்றும் 75388 84840 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments