முழு ஊரடங்கான இன்று மே 16 கொரோனா நிவாரண நிதி விநியோகம் - தமிழக அரசு

முழு ஊரடங்கு நாளிலும் கொரோனா நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தினமும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய் பரவலை தடுக்க, ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்களும், சட்டமன்ற  கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது. 

இதனைதொடர்ந்து ஊரடங்கை தீவிரப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. காலை, 10:00 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகை, பழக்கடைகள் திறந்திருந்தன. மருந்தகங்கள், உணவகங்கள் தவிர மற்ற கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. காலை, 10:00 மணிக்கு மேல், மக்கள் வீடுகளில் முடங்கினர். 

இந்த சூழலில் இன்று ஞாயிற்றுக்கிழமை, தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் எந்த கடைகளும் திறக்கப்படாது. இதன்படி நாளை காலை, 4:00 மணி வரை முழு ஊரடங்கு தொடரும். நாளை காலை, 6:00 மணி முதல்,  திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்றவற்றுக்காக, மாவட்டங்கள் உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையிலும் பயணம் மேற்கொள்ள,'இ -- பதிவு' அவசியம். இதன்படி www.eregister.tnega.org என்ற இணையதளத்தில், இ -- பதிவு செய்து கொள்ள வேண்டும் அந்த ஆவணத்துடன் பயணம் செய்தால், தடையின்றி செல்லலாம் என்று அரசு அறிவித்து உள்ளது.

இதனிடையே நேற்று முதல் டோக்கன் அடிப்படையில் தினமும் 200 பேர் வீதம் ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் டோக்கன் பெற்றுள்ளோருக்கு தடையின்றி ரேஷன் கடைகளில் இன்று நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘‘நிவாரண நிதி வழங்குவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் நிவாரண நிதி முழுமையாக வழங்கி முடிக்கப்படும். எத்தனை நாட்கள் ஆனாலும் இந்த பணி சிறப்பாக முழுமையடையும். எனவே பொதுமக்கள் முண்டியடித்து ரேஷன் கடைகளில் குவியவேண்டாம். நிதானமாகவே வாங்கி கொள்ளலாம்’’ என்று ஏற்கனவே கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments