3 மாதமாக சம்பளம் இல்லை: வறுமையில் வாடும் புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல் படையினர்3 மாதமாக சம்பளம் வழங்காததால் ஊர்க்காவல்படை காவலர்கள் வறுமையில் வாடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 300-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இக்கட்டான நேரங்களில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், போக்குவரத்தை சீரமைப்பதிலும் ஊர்க்காவல்படை காவலர்களின் பங்கு மகத்தானது. குறைந்த மதிப்பூதியத்தில் சேவை நோக்கத்தோடு, போலீசாருக்கு துணையாக ஊர்க்காவல்படையினர் இரவு, பகலாக பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா பெரும் தொற்றால் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தபட்டு உள்ள நிலையில் ஊர்க்காவல்படை காவலர்களுக்கு தினமும் பணி வழங்கபடுகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊர்க்காவல்படை காவலர்களுக்கு கடந்த 3 மாதமாக மதிப்பூதியம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டு உள்ளது. பணிக்கு செல்ல இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து ஊர்க்காவல் படை காவலர் ஒருவர் கூறுகையில், இரவு, பகலாக தன்னலம் இன்றி பணிபுரிந்து வருகிறோம். பெரும் தொற்று காலத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முக கவசம் அணியவும் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஊர்க்காவல் படையினருக்கு முழுநேர பணி வழங்கப்பட்டு மாத ஊதியம் தடையின்றி வழங்கப்படுகிறது.

இதேபோல் தமிழக ஊர்க்காவல்படையினருக்கும் 30 நாள் பணி வழங்க வேண்டும். இக்கட்டான தருணத்தில் துணை நிற்கும் ஊர்க்காவல்படை காவலர்களுக்கு நிலுவை மதிப்பூதியத்தையும், கொரோனா கால சிறப்பு ஊதியத்தையும் உடனே வழங்க வேண்டும் என கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments