மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விராலிமலையில் போட்டியிட்ட மாவட்ட செயலாளர் விலகல்: தொகுதியில் 4 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தும் ஓட்டுப்போடவில்லை என புலம்பல்



மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட மாவட்ட செயலாளர் சரவணன் கட்சியில் இருந்து விலகினார். தொகுதியில் 4 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தும் யாரும் ஓட்டுப்போடவில்லை என புலம்பினார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தோல்விக்கான காரணம் குறித்து நிர்வாகிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். கடசி தலைவர் நடிகர் கமல்ஹாசன் சரியாக வழி நடத்தவில்லை என்ற குறையையும் முன்வைத்துள்ளனர்.

சமீபத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த முருகானந்தம் விலகினார். அவருடன் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலரும் விலகினர். அதில் புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளர் சரவணனும் ஒருவர் ஆவார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர் ஆவார். அவர் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு விலகல் கடிதம் அனுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ``கட்சியில் தலைமை சரியில்லை. தலைவரிடம் இருக்கும் நேர்மை, தலைமை தேர்தல் அலுவலகத்தில் இல்லை. கஜா புயலின் போது ஏராளமான நலத்திட்ட உதவிகளை கட்சியுடன் சேர்ந்து செய்து வந்தேன். கட்சிக்காகவும், மக்களுக்காகவும் செய்த சேவைகள் ஏராளம். விராலிமலை சட்டமன்ற தொகுதியில் கட்சியில் 4 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் நான் தேர்தலில் 559 வாக்குகள் தான் வாங்கினேன். கட்சியில் உள்ள உறுப்பினர்களே எனக்கு ஓட்டுப்போடவில்லை. கட்சியில் ஜனநாயகம் இல்லை. அதனால் எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி விலகினேன்'' என்றார்.

இதேபோல புதுக்கோட்டை மத்திய மாவட்ட ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து ஜெய்பார்த்தீபன் ராஜினாமா கடிதம் கொடுத்து விலகியிருக்கிறார். மாவட்ட செயலாளர் பொறுப்பில் வகித்தவர்கள் விலகியிருப்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சியில் மற்ற நிர்வாகிகள் செய்வதறியாமல் உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments