புதுக்கோட்டை மாவட்டத்தில் 4.46 லட்சம் குடும்பங்களுக்கு கரோனா நிவாரணத் தொகை: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்



புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 லட்சத்து 46 ஆயிரம் குடும்பங்களுக்கு கரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை வழங்கும் பணியை அமைச்சர்கள்  (மே 15) தொடங்கி வைத்தனர்.

கரோனா முதல் அலையின்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக வலியுறுத்தியது. அப்போது, குடும்பங்களுக்கு ரூ.1,000 வீதம் அதிமுக அரசு வழங்கியது.

இதைத் தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக வெற்றி பெற்றால் குடும்பங்களுக்கு கரோனா நிவாரணத் தொகை ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற அதே நாளில் கரோனா நிவாரணத் தொகை வழங்குதல் உட்பட 5 முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். முதல் தவணையாக ரூ.2,000 வீதம் வழங்கும் பணி தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.

புதுக்கோட்டை கலீப் நகர் ரேஷன் கடையில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கரோனா நிவாரணத் தொகை விநியோகத்தைத் தொடங்கி வைத்தனர்.

இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வை.முத்துராஜா ( புதுக்கோட்டை), எம்.சின்னதுரை (கந்தர்வக்கோட்டை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 வட்டங்களில் உள்ள 4 லட்சத்து 46 ஆயிரத்து 314 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 313 ரேஷன் கடைகள் மூலம் ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.89.26 கோடி வழங்கப்பட இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, முதல் நாளில் நிவாரண நிதி பெறுவதற்கு டோக்கன் பெற்றவர்கள் அதிகாலையிலேயே ரேஷன் கடைகளில் திரண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments