மேற்பரப்பை சுரண்டி எடுக்காமல் புதிய சாலைகள் போடக் கூடாது: நெடுஞ்சாலைத் துறைக்கு தலைமைச் செயலர் இறையன்பு அறிவுறுத்தல்





சாலைகளின் மேற்பரப்பை சுரண்டி எடுத்த பிறகே புதிய சாலைகள் போட வேண்டும் என தலைமைச் செயலர் வெ.இறையன்பு நெடுஞ்சாலைத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சாலைகள் போடும்போது, ஏற்கெனவே உள்ள சாலைமேலேயே மறுபடியும் சாலைகள் போடுவது வழக்கமாக இருக்கிறது, இதனால் சாலைகளின் உயரம்ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 முதல்6 அங்குலம் உயர்த்தப்படுகிறது. இப்படி, ஒவ்வொரு ஆண்டும்சாலையின் உயரம் உயர்த்தப்படுவதால் மழைக் காலத்தில் வீடுகள், கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தமிழகத்தில் சாலைகள் போடுவது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்ந்த சாலைகளில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளும்போது, ஏற்கெனவே உள்ள சாலை மட்டத்தை உயர்த்துவதால், சாலையின் தன்மை பாதிக்கப்படுகிறது. மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சாலைகள் ஏற்கெனவே இரண்டு அல்லது மூன்று அடுக்குகள் அடர் தார்தளம் போடப்பட்டு இருக்கும்.

ஆதலால், மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சாலைகளில் மேலும் ஓர் அடுக்கு அடர் தார்தளம் போட்டு சாலை மட்டத்தை உயர்த்த வேண்டியது இல்லை.

சாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தைச் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் போட வேண்டும். மேற்பரப்பைச் சுரண்டிவிட்டு சாலை போடுவது வீடுகளுக்குள் நீர் புகாமல் தடுக்கும். எந்தச் சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளின் மட்டத்தை அதிகரிக்கக் கூடாது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சாலைகள் போதிய கனத்துடன் இருப்பதால் பிபிடி சோதனை தேவையில்லை.

இவ்வாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நிபுணர்கள் வரவேற்பு

இதுதொடர்பாக கட்டிடவியல் நிபுணர் கோ.வெங்கடாசலம் கூறும்போது, ‘‘பழைய சாலைகளை எடுத்துவிட்டுதான் புதிய சாலைகளை போட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள தலைமைச் செயலருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சுமார் 40 ஆண்டுகாலம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த தவறு நிறுத்தப்படுகிறது. புராதன சின்னங்கள், கோயில்கள் சாலை மட்டத்தில் இருந்து ஒரு அடி முதல் ஒன்றரை அடிவரை பள்ளத்தில் இருக்கின்றன தற்போது, எடுத்துள்ள இந்த நிலைப்பாட்டால் இதை தவிர்க்கலாம். அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு, சாலை விபத்துகளை தவிர்க்கலாம். சாலை மட்டத்தை உயர்த்திக் கொண்டே போவதால் மழைநீர் வடிகால் பெரிய ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது, அதையும் தற்போது தவிர்க்கலாம்’’ என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments