புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் ரத்தப் பற்றாக்குறை: முகாம் நடத்தி ரத்தம் சேகரித்த தன்னார்வ அமைப்பு






புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நிலவும் ரத்தப் பற்றாக்குறையைப் போக்க முகாம் நடத்தி, தனியார் ரத்த தான தன்னார்வலர் குழு ரத்தம் சேகரித்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரத்ததானம் செய்வோர் 500-க்கும் மேற்பட்டோரை உள்ளடக்கி 'குருதிக் கூடு' என்ற வாட்ஸ் அப் குழு நடத்தப்பட்டு வருகிறது. இக்குழுவில் உள்ளோர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு நேரடியாகவே சென்று ரத்த தானம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா 2-வது அலை பரவலினால் ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆகையால், மருத்துவமனைகளிலும் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, முகாம் நடத்தி ரத்தம் சேகரித்துக் கொடுக்கும் பணியை இந்த ரத்ததானக் குழு இன்று தொடங்கியது.

முதல் நாளாக கொத்தமங்கலத்தில் பல்வேறு சேவை அமைப்புகளோடு இணைந்து இன்று (மே 7) நடத்திய ரத்த தான முகாமில் மாவட்ட அரசு ரத்த வங்கி மூலம் 54 பேரிடம் இருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டது.

இதுகுறித்து குருதிக்கூடு ரத்த தானக் குழு நிர்வாகி முத்து ராமலிங்கன் கூறும்போது, ’’புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு மட்டுமே நேரடியாகச் சென்று 'குருதிக்கூடு' மூலம் ரத்த தானம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 மாதங்களில் 1,000 யூனிட் ரத்த தானம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பல்வேறு ரத்த தான அமைப்புகளும் ஆதரவு அளித்து வருகின்றன.

கரோனா பரவல் அச்சத்தாலும், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் சில மாதங்களுக்கு ரத்த தானம் செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதாலும் தற்போது ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. ஆகையால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட சில அரசு மருத்துவமனைகளில் ரத்தத்துக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. தன்னார்வலர்களாலும் முன்பைப் போன்று உடனடியாக ரத்தம் ஏற்பாடு செய்ய முடியாத சூழல் நிலவுவதால் முகாம் நடத்தி ரத்தம் சேகரிக்கத் திட்டமிட்டோம்.

முதல் கட்டமாகக் கொத்தமங்கலத்தில் சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து 54 பேரிடம் இருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிற இடங்களிலும் முகாம் நடத்தி ரத்தம் சேகரித்து உயிர் காக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம். கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் அச்சமின்றி ரத்த தானம் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments