ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகளை போல நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்ட வழக்குகளையும் தள்ளுபடி செய்ய கோரிக்கை!தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது போல நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்ட வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீரமங்கலம் அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்த நாளே விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து கையெழுத்து இயக்கம் நடத்தினர். அன்று முதல் நெடுவாசலை சுற்றியுள்ள கிராம மக்களும் தொடர்ந்து 22 நாட்கள் நாடியம்மன் கோவில் திடலில் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதே போல அருகில் உள்ள நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு ஆகிய ஊர்களில் போராட்டங்கள் நடந்தன. மத்திய, மாநில அமைச்சர்களின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து முதல்கட்ட போராட்டம் 22 நாட்களில் நிறுத்தப்பட்டது.

ஆனால் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து 2-ம் கட்ட போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கீரமங்கலம், கைகாட்டி, நல்லாண்டார்கொல்லை, ஆலங்குடி உள்பட பல ஊர்களில் விவசாயிகள், இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டதால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 2-ம் கட்ட போராட்டம் 174 நாட்கள் நடந்தது. மொத்தம் 196 நாட்கள் நெடுவாசல் போராட்டம் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்திய மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. அதே போல நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தின் பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கீரமங்கலம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறும் போது, `ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகளை ரத்து செய்தது போல நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்ட வழக்குகளையும் ரத்து செய்வதுடன் நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கருக்காக்குறிச்சி, கோட்டைக்காடு ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத ஆழ்குழாய் கிணறுகளை பாதுகாப்பாகவும், முழுமையாகவும் மூடிவிட்டு விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்' என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments