புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினால் குண்டர் சட்டம் பாயும் என போலீசார் எச்சரிக்கை!!முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் மூடலால் புதுக்கோட்டையில் சாராயம் காய்ச்சும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதுவரை 15 ஆயிரம் லிட்டர் ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்படடுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் சிலர் சாராயம் காய்ச்சி விற்கும் தொழிலில் ஈடுபட தொடங்கினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டத்தில் ஆங்காங்கே சோதனை நடத்தி சாராய ஊறலை பறிமுதல் செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் சாராயம் காய்ச்சியது தொடர்பாக இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 15 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

சாராய ஊறல்கள் காட்டுப்பகுதியில் போடப்படுவதால் ஊறலில் விஷப்பூச்சிகள் விழுவதாலோ, ஊறலில் கலவையின் தன்மைமாறும் போதோ உயிரிழப்புகள் ஏற்பட பெரிதும் வாய்ப்புள்ளது. சாராய ஊறல் போடுவதற்காக தங்களது காலியிடத்தினையோ அல்லது தோட்டத்தினையோ பயன்படுத்த அனுமதிக்கும் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்கள் மீதும் கடும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சாராய ஊறல் போடுவது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிவித்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க தாமாக முன்வர வேண்டும். குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என போலீஸ் பாலாஜி சரவணன் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments