புதுக்கோட்டையில் ஆக்சிஜன் இல்லை என நோயாளிகளை திருப்பி அனுப்பினால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை





புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் இல்லை எனக் கூறி, நோயாளிகளை திருப்பி அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்தார்.

கரோனா தொற்றாளர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இங்கு 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் ஆக்சிஜன் டாங்க் இருந்தாலும், தினசரி சராசரியாக 2,500 கிலோ ஆக்சிஜன் மட்டுமே கிடைக்கிறது. இது, உள்நோயாளிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு போதுமானதாக இல்லை. இதனால், மருத்துவமனைக்கு புதிதாக வருவோர் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

அரசு இணையதளத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக இருப்பதாக தெரிவித்துவிட்டு, வந்ததும் இடமில்லை என திருப்பி அனுப்புவது மக்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது.

இது குறித்து 'மக்கள் பாதை' ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் கூறுகையில், "மக்கள் பாதை அமைப்பின் நிர்வாகியாக இருந்த முள்ளூரைச் சேர்ந்த ஞா.ஞானபாண்டியன், 12-ம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அங்கு, அவருக்கு கரோனா பரிசோதனைக்காக மாதிரி எடுக்கப்பட்ட பிறகு, வேறு ஒரு பொது வார்டுக்கு மாற்றப்பட்டார். இவரோடு, அந்த வார்டில் இருந்தவர்கள் அனைவருமே பரிசோதனைக்காக காத்திருந்தனர்.

இவர்களில், ஞானபாண்டியன் உட்பட பலருக்கும் மூச்சுத்திணறல் இருந்ததால், ஆக்சிஜன் வழங்குமாறு பலமுறை கேட்டும் கிடைக்கவில்லை.

பின்னர், 2 நாட்கள் கழித்து ஞானபாண்டியன் உட்பட அங்கு சிகிச்சை பெற்ற 7 பேர் அடுத்தடுத்து இறந்துவிட்டனர். இறந்த பிறகுதான் ஞானபாண்டியனுக்கு கரோனா தொற்று இருப்பதாக, பரிசோதனை முடிவின் மூலம் தெரிவிக்கப்பட்டது. பரிசோதனை முடிவு கொடுப்பதில் தாமதத்தினாலும், ஆக்சிஜன் வழங்காததுமே இறப்புக்கு காரணம்.

எனவே, பரிசோதனை முடிவை விரைந்து கொடுக்க வேண்டும். அதுவரை, பொது வார்டில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையினால் பலரும் துடிதுடித்து வருகின்றனர். எனவே, கூடுதலாக ஆக்சிஜன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இது குறித்து, ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி கூறுகையில், "ஆக்சிஜன் பிரச்சினை குறித்து மாநில அளவில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் தேவையைப் பொறுத்து ஆக்சிஜன் பெறப்பட்டு வருகிறது.

தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் பெற இயலாது. ஆக்சிஜன் முடிவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பிருந்தே ஆக்சிஜனை கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிற மாவட்டங்கள், தனியார் மருத்துவமனைகள் என எங்கிருந்து யார் வந்தாலும் ஆக்சிஜன் இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். இதை முறையாக கண்காணிக்குமாறு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments