புதுக்கோட்டை: அதிரடி காட்டும் எஸ்.பி - பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்க நடவடிக்கை
புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு  பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனம் மற்றும் மடிக்கணினியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த பாலாஜி சரவணன், சென்னை துணை ஆணையராக மாற்றப்பட்டதையடுத்து, பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்த நிஷா பார்த்திபன், புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட அவர்,   அதிகரித்து வரும் போக்சோ வழக்குகள், குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்கு, பெற்றோர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சம்பந்தப்பட்டோர் மீது காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


மணல் கடத்தல், சாராயம், கஞ்சா, லாட்டரி விற்பனை போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தனிப்படை அமைத்துக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

இருசக்கர வாகனம், மடிக்கணிணி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து தடுக்கும் வகையில் பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனம் மற்றும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 20 காவல் நிலையங்களுக்கு தலா ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு மடிக்கணினியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் கொடியசைத்து தொடங்கி வைக்க, இருசக்கர வாகனங்களில் பெண் காவலர்கள் பயணத்தை தொடங்கினர்.

அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், இந்த இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண் காவலர்கள் பயணம் செய்வார்கள் என்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments