தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வுகள் வருமா? அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை






கொரோனா தொற்று படிப்படியாக குறைகிறது: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வுகள் வருமா? அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
 
ஊரடங்கு உத்தரவு வரும் 14-ந் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் அதை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற நேரத்தில் இருந்து கொரோனா தொற்றின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்தது. ஏற்கனவே இருந்த ஊரடங்கு உத்தரவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கடுமையாக்கி, கடந்த மே 24-ந் தேதியில் இருந்து தளர்வுகள் எதுவும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

இந்த முழு ஊரடங்கு உத்தரவு 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, 36 ஆயிரம் என்ற தினசரி தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 19 ஆயிரம் என்ற எண்ணிக்கைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து 7-ந் தேதியில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரு நாளின் தொற்று எண்ணிக்கை 17 ஆயிரத்து 321 ஆக குறைந்திருந்தது. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்புகளில் அந்த சூழ்நிலை எழவில்லை.

இன்று ஆலோசனை

இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மாவட்ட கலெக்டர்களுடனும், மருத்துவ நிபுணர் குழுவுடனும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசனை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் தொடர்பாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் வெளியிடுவார்.

தற்போது 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. அங்கும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? என்பதும் இந்த கூட்டங்களுக்கு பிறகுதான் தெரியும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments