இலங்கை அரசு நெடுந்தீவு அருகே பழுதடைந்த பஸ்களை கடலுக்குள் இறக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்: கோட்டைப்பட்டினம் மீனவர்கள் வலியுறுத்தல்!!இலங்கை அரசு நெடுந்தீவு அருகே பழுதடைந்த பஸ்களை கடலுக்குள் இறக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோட்டைப்பட்டினம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை அரசு நெடுந்தீவு அருகே நடுக்கடலில் கப்பல் மூலம் பழுதடைந்த பஸ்களை கடலுக்குள் இறக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியானது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர் சங்கத்தினரும் வலியுறுத்தி உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இத்திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவ சங்க மாநிலச் துணைத் தலைவர் ஹபீப் ரஹ்மான் கூறியதாவது:-

கடல் வளத்தை மேம்படுத்துவதாக இலங்கை அரசு ஒரு புதிய திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் திட்டத்தின் மூலமாக பழுதடைந்த பெரிய பஸ்களை கடலுக்குள் இறக்கி அதில் செயற்கை பாறைகள் வளர்க்கப் போவதாக அறிவிப்பு செய்து முதல் கட்டமாக நெடுந்தீவு அருகே 4 பஸ்களை கடலுக்குள் இறங்கி உள்ளனர்.

இந்த திட்டமானது முழுக்க முழுக்க தமிழக மீனவர்களை வஞ்சிக்கும் திட்டமாகும். ஏனென்றால் நெடுந்தீவு பகுதிகளில் அதிகமாக மீன்பிடித்தொழில் செய்வது தமிழகத்தை சேர்ந்த ராமேசுவரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள். தமிழக மீனவர்கள் பொதுவாக இழு வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு அப்பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்கும்போது வலைகள் கடலுக்குள் அடியிலுள்ள இந்த பழுதடைந்த பஸ்களில் சிக்கி சேதமடையும். அதில் படகுகள் மோதினால் சேதமடைந்து கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால் மீனவர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாவார்கள்.

இலங்கை அரசு தமிழக மீனவர்களை வஞ்சிக்கும் நோக்கத்தோடு தான் இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றனர். ஆகையால் இதுபோன்ற மிக மோசமான திட்டத்தை இலங்கை அரசு கைவிட வேண்டும். இதனை மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments