கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்களுக்காக மைதானம் அமைக்கப்படும் புதுக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதன் தகவல்
கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்களுக்காக மைதானம் அமைக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டி
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.6 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு உள்விளையாட்டரங்க கட்டுமான பணியை சுற்றுச்சூழல் துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒலிம்பிக் பயிற்சி பெறுவதற்கான அடிப்படை வசதிகள் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து முதல் முறையாக 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தடகள போட்டியில் 5 பேர் தேர்வு செய்திருப்பது வரலாற்றில் முதல் முறையாகும். இவர்களுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையாக முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார்.
ஆக்சிஜன் வசதி
தமிழகத்தில் கிராமங்களில் விளையாட்டு வீரர்களை உருவாக்க தேவையான அனைத்து வசதிகளும் அந்த கிராமத்திலேயே அமைத்து கொடுக்க  நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் உலக தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
கிராமப்புறங்களில் கிரிக்கெட், கபடி மற்றும் வலைப்பந்து மைதானங்கள் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொரோனா 3-வது அலை ஏற்படும்போது அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்படும் என மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே எந்தெந்த தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறதோ, அதில் இருந்து ஆக்சிஜன் கிடைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு
திருப்பூர், தஞ்சை, திருவாரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உலக தரம் வாய்ந்த சிந்தெடிக் மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவரிடம், கடந்த காலங்களில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் விளையாட்டு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தள்ளதே என நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, முறைகேடு நடந்துள்ளது என பதில் அளித்துவிட்டு சென்று விட்டார்.
அதன்பின் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கலெக்டர் கவிதா ராமு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments