வேலூர் கஸ்பா நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ‘காயகல்ப்’ விருதுடன் ரூ.2 லட்சம் ரொக்க பரிசு அறிவிப்பு


சிறப்பான பராமரிப்புக்காக வேலூர் கஸ்பா நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மத்திய அரசின் ‘காயகல்ப்’ விருதுடன் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக் கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தேசிய சுகாதார இயக்க திட்டத்தின் மூலமாக தூய்மை மற்றும் வெளிப்படையான நிர்வாகத்துடன் செயல்படும் அரசு மருத்துவமனை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆண்டு தோறும் ‘காயகல்ப்’ விருதுடன் பரிசுத் தொகையும் அறிவிக்கப் பட்டு வருகிறது. 2020-21-ம் நிதியாண்டில் சிறப்பாக செயல்படும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறித்த ஆய்வு மேற்கொள் ளப்பட்டது.

அதன்படி, 2020-21-ம் ஆண்டில் தமிழக அளவில் சிறப்பான பராமரிப்புக்காக வேலூர் கஸ்பா நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ‘காயகல்ப்’ விருதுடன் ரூ.2 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகரில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் இந்த நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் 6 படுக்கை வசதிகள் கொண்டது. ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர்கள், மருந்தாளுநர், உதவியாளர்கள் என 15 பேருடன் இயங்கி வருகிறது.

தினசரி சராசரியாக 180-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு, சாதாரண மருத்துவப் பரிசோதனையுடன் பிரசவம், காசநோய், தொழுநோய் கண்டறிதல், டெங்கு தடுப்பு பணிகளுடன் குழந்தைகளுக்கான தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. தினசரி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொது மருத்துவ பரிசோதனையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு பிரிவு மருத்துவர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சுகாதாரமான மருத்துவ வளாகம், நோயாளிகள் குறித்த ஆவணங்கள் பராமரிப்பு என பல்வேறு சிறப்புகளுடன் ‘காயகல்ப்’ விருது பெற்ற கஸ்பா நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் சூர்யா சரவணன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘இட நெருக்கடியான பகுதியில் உள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் முழு பராமரிப்பு பணியை வேலூர் ரோட்டரி நிர்வாகம் ஏற்றுள்ளது.

இங்கு, மாதத்துக்கு 20 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெறுகிறது. மிகவும் சிறிய கட்டிடமாக இருந்தாலும் பகுதி பகுதியாக பிரித்து நோயாளிகள் காத்திருப்பு அறை, ஊசி செலுத்தும் பகுதி, பாலூட்டும் தாய்மார்கள் அறை என மாற்றிக் கொடுத்துள்ளனர். விருதுடன் கிடைக்கும் ரூ.2 லட்சம் பரிசுத் தொகை ஆரம்ப சுகாதார நிலையத்தின் வளர்ச்சிக்கு பயன் படுத்தப்படும்’’ என தெரிவித்தார்.

இதுதொடர்பாக, வேலூர் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ராகவன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘மிகவும் பழமையான கட்டிடம் என்பதால் முழு பராமரிப்பையும் மேற்கொள்ள கடந்த 2008-ம் ஆண்டு மாநகராட்சி எங்களிடம் ஒப்படைத்தது. அன்று முதல் இன்று வரை மருத்துவமனைக்கு தேவையான அனைத்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் வாங்கிக் கொடுத்து வருகிறோம். ரூ.10 லட்சத்தில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டியுள்ளோம். இந்த சுகாதார நிலையத்தின் வளர்ச்சிக்கு மருத்துவர் ஷோபனா, தற்போதுள்ள மருத்துவர் சூர்யா ஆகியோரின் பங்கு மிகப்பெரியது. எங்கள் பராமரிப்பில் இருக்கும் சுகாதார நிலையத்துக்கு மத்திய அரசின் விருது கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி’’ என தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments