புதுக்கோட்டை அருகே ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படுமா?


புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் பகுதியில் சாலையோரம் வரிசை கட்டி 5 இடங்களில் திறந்த நிலையில் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில், வம்பன் யூகலிப்டஸ் காட்டில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, அங்கிருந்து குழாய்கள் மூலம் திருவரங்குளம் பகுதிக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஏற்கெனவே அமைக்கப்பட்ட 5 ஆழ்துளைக் கிணறுகள் தண்ணீர் இன்றியும், பழுதடைந்து விட்டதாலும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. எனினும் அவை, மூடப்படாமல், திறந்த நிலையிலேயே உள்ளன. இவை சாலையோரமாக இருப்பதால், ஆடு, மாடுகளை மேய்க்கும் சிறுவர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது.

எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக ஊரக வளர்ச்சித் துறையினர் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூடி, பாதுகாக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.சொர்ணக்குமார் கூறியபோது, ''கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் சுஜித் இதுபோன்ற ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இதுபோன்ற ஆழ்துளைக் கிணறுகள் மூடிப் பாதுகாக்கப்பட்டன.

ஆனாலும், இங்கு திறந்தே இருப்பது வேதனை அளிக்கிறது. அலட்சியம் காட்டாமல் திருவரங்குளம் ஊரக வளர்ச்சித் துறையினர் உடனே, கிணறுகளை மூட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

இதுகுறித்துத் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் கேட்டபோது, "ஆழ்துளைக் கிணறுகளை விரைவில் மூட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments