மீமிசல் அருகே கிளாரவயலில் பள்ளிக்கூடம் கட்டவிடாமல் தடுக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்ற தலைவர் வலியுறுத்தல்!!



புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்துள்ள கிளாரவயலில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பள்ளிக்கட்டிடம் கட்டவிடாமல் ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மணமேல்குடி ஒன்றியம் வெட்டிவயல் ஊராட்சி மன்றத் தலைவர் மேனகா அய்யப்பன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மனுடன் புதன்கிழமை சந்தித்து அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளது:

வெட்டிவயல் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாரவயல் கிராமத்தில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடம் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து சிஐடிஎஸ் திட்டத்தின்கீழ் புதிய கட்டிடம் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. கடந்த வருடம் பள்ளிக்கான இடத்தில் அளவீடுசெய்து கட்டுமானப் பொருட்களும் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், வருவாய்த்துறை அளவீடு செய்துள்ள இடத்தை சிலர் ஆக்கிரமிப்புசெய்து தற்காலிக கொட்டகை அமைத்துள்ளனர். இதனால், பள்ளிக்கான கட்டுமானப் பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறந்தாங்கி சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தும் பயனில்லை. எனவே, மேற்படி ஆக்கிரமிப்பை அகற்றி பள்ளிக்கான கட்டிடம் கட்டிட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments