புதுக்கோட்டை அருகே குடிநீர் வாங்கப் பெண்கள் கூலி வேலைக்குச் செல்லும் அவலம்: தரமான குடிநீர் விநியோகிக்க கோரிக்கை


புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் விலை கொடுத்துக் குடிநீர் வாங்குவதற்காகவே கூலி வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளதாகப் பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருங்களூர் முதல் நிலை ஊராட்சியில் 17 குக்கிராமங்கள் உள்ளன. மானாவாரி விவசாயப் பகுதியாக உள்ள இந்த ஊராட்சியில் சுமார் 2,000 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இங்கு, 2 குக்கிராமங்களைத் தவிர ஏனைய 15 கிராமங்களில் விநியோகிக்கப்படும் குடிநீரானது உப்பாக உள்ளது. இதனால், அந்த நீரைக் குடிப்பதற்கு அல்லாமல், மற்ற தேவைகளுக்கே பயன்படுத்தி வருகின்றனர். குடிப்பதற்கு தினமும் குடம் ரூ.10-க்கு 5 குடங்கள் வீதம் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் குடிநீரை வாங்குவதற்காகவே காலிக் குடங்களோடு அதிகாலையிலேயே பெண்கள், சிறுவர்கள் வீட்டு வாசலில் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்துப் பெருங்களூரைச் சேர்ந்த பெண்கள் கூறும்போது, ''புதுக்கோட்டை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஊர் இருந்தாலும், மக்களின் வாழ்வாதாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு எந்த ஒரு தொழிற்சாலையும் இல்லை. மானாவாரியாக ஆண்டுக்கு ஒரு போகம் மட்டுமே சிறுதானியங்களைப் பயிரிட்டு வருகிறோம். மேலும், கூலி வேலைக்காகப் பக்கத்துக்கு ஊருக்குச் செல்கிறோம்.

வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகிப்போரிடம் இருந்து தினமும் குடிநீர் வாங்குவதற்கே ஒவ்வொரு குடும்பத்தினரும் தலா ரூ.50-ல் இருந்து ரூ.100 வரை செலவிடுகின்றனர். கூலி வேலைக்குச் சென்றாலும் நாளொன்றுக்கு ரூ.100தான் கிடைக்கும். இந்தத் தொகையையும் குடிநீர் வாங்குவதற்கே பயன்படுத்த வேண்டியுள்ளது.

எனவே, உப்புத் தன்மை இல்லாத பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அரசு, தரமான குடிநீர் விநியோகிக்க வேண்டும். அல்லது, ஆங்காங்கே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சரண்யா ஜெய்சங்கர் கூறும்போது, ''ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஒரு ஆழ்துளைக் கிணறு வீதம் அமைத்து, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், 2 குக்கிராமங்களைத் தவிர ஏனைய கிராமங்களில் தண்ணீரில் உப்புத் தன்மையின் அளவு அதிகமாக உள்ளதால் அதை யாரும் குடிப்பதற்குப் பயன்படுத்துவதில்லை. வேறு இடங்களில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துத் தரக் கோரி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம்'' என்று தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments