கொரோனா பாதிப்பு; மறு அறிவிப்பு வரும் வரை அமீரகத்தில் இருந்து சவுதி அரேபியாவுக்கு விமான சேவை ரத்து




மறு அறிவிப்பு வரும் வரை அமீரகத்தில் இருந்து சவுதி அரேபியாவுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமீரக விமான நிறுவனங்கள் கூட்டாக தெரிவித்துள்ளன.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து சவுதி அரேபியாவின் விமான போக்குவரத்து பொது ஆணையம் ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, வியட்நாம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் வர தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது அமீரக விமான நிறுவனங்களும் மறு அறிவிப்பு வரும் வரை சவுதி அரேபியாவுக்கு விமானங்கள் இயக்கப்படாது என தெரிவித்துள்ளன.

இது குறித்து துபாய் எமிரேட்ஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

துபாயில் இருந்து சவுதி அரேபியாவின் ரியாத், ஜெத்தா, தமாம் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது.

இதை முன்னிட்டு சவுதி அரேபியாவுக்கு சென்ற அமீரகத்தை சேர்ந்தவர்கள், அமீரக குடியிருப்பு விசா பெற்றவர்கள் உள்ளிட்டோரை மீண்டும் துபாய் நகருக்கு அழைத்து வரும் வகையில் நேற்று சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த விமானங்கள் ரியாத், ஜெத்தா, தமாம் ஆகிய நகரங்களில் இருந்து இயக்கப்பட்டது. எனவே சவுதி அரேபியாவுக்கு சென்றவர்கள் மீண்டும் அமீரகம் வருவதற்கு முன்பதிவு செய்த பயண தேதியை மாற்றியமைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எதிகாத் விமான நிறுவனமும் மறு அறிவிப்பு வரும் வரை சவுதி அரேபியாவுக்கு செல்லும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments