தவறி விழுந்த சிறுவனின் தொடையில் 3 அடி நீளத்திற்கு பாய்ந்த குச்சி
தேக்கு மரத்தில் ஏறி ஆட்டுக்கு தழை பறித்தபோது தவறி விழுந்த சிறுவனின் தொடையில் 3 அடி நீள குச்சி பாய்ந்தது. அதனை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்தனர்.

சிறுவனின் தொடையில் பாய்ந்த குச்சி 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாணதிரையன்பட்டினத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பூபதி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் ராஜா(வயது 11). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த 6-நதேதி ஆட்டிற்கு தழை பறிப்பதற்காக வீட்டின் அருகே இருந்த தேக்கு மரத்தில் ஏறினான். அப்போது கால் வழுக்கியதால் தேக்கு மரத்தில் இருந்து கீழே விழுந்தான். அப்போது அருகில் இருந்த மற்றொரு தேக்கு மரத்தின் குச்சி அவனுடைய தொடையில் ஒரு முனையில் குத்தி மறுமுனை வழியாக வெளியே வந்தது.
 
அறுவை சிகிச்சை

இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் சத்தம் போட்டான். அவனது அலறல் சத்தம் கேட்டு அவனுடைய தாயார் மற்றும் அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மரத்தோடு இருந்த குச்சியை அறுத்து எடுத்தனர். சிறுவன் தொடையில் குத்திய குச்சி 3 அடி நீளத்திற்கு காணப்பட்டது. 

இதையடுத்து சிறுவனை அவனது தாயார் பூபதி அழைத்துக்கொண்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் காலில் பாய்ந்து இருந்த குச்சியை அகற்ற முடிவு செய்தனர்.

30 நிமிடங்களில் அகற்றினர்

இதனையடுத்து மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் உத்தரவின் பேரில், அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஜெகதீசன் தலைமையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் கோபிநாத், முத்துவிநாயகம், பயிற்சி டாக்டர்கள் ஷபீகா, ஆண்டியப்பன், லிவின் ஆகியோர் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். 30 நிமிடங்களில் அந்த குச்சியை டாக்டர்கள் அகற்றி சாதனை படைத்தனர். தற்போது அந்த சிறுவன் குணமடைந்து வீடு திரும்பினான்.

இது குறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் கூறியதாவது:

டாக்டரை அணுக வேண்டும்

சிறுவனின் தொடையில் 3 அடி நீள குச்சி குத்தியதையடுத்து அவனுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அகற்றினோம். சிறுவன் மருத்துவமனைக்கு வந்த ஒரு மணி நேரத்திற்குள் உரிய பரிசோதனை செய்து குச்சியை அகற்றினோம். அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டிருந்தால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு கால் செயலற்ற நிலைக்கு சென்றிருக்கும்.
உரிய முறையில் சிகிச்சை அளித்து அகற்றியதால் சிறுவனுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தற்போது சிறுவன் நன்றாக நடக்கிறான். இது போன்று ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நேரும்போது மக்கள் தாங்களாகவே அகற்றாமல் டாக்டர்களை அணுகி உரிய முறையில் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments