புதுக்கோட்டை: கொரோனாவால் தாயை இழந்த சிறுமிக்கு காவல்துறை உதவி




புதுக்கோட்டை: கொரோனாவால் தாயை இழந்த சிறுமிக்கு காவல்துறை உதவி

அன்னவாசல் அருகே உள்ள கடம்பராயன் பட்டியில் கொரோனாவில் தாயை இழந்த சிறுமிக்கு காவல்துறையினர் உதவி வழங்கினர்.

சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கடம்பராயன் பட்டியில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இலுப்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு தலைமை தாங்கினார். இதில் ஏடிஎம் கார்டு நம்பர், ஆதார் கார்டு நம்பர், சிசிவி பாஸ்வேர்ட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும், யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தங்களின் ரகசிய குறியீடு எண்ணை கடன் பற்று அட்டை மீது குறித்து வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் இணையத்திலோ அல்லது தொலைபேசியிலோ உங்களது சுய விவரங்களை எவரேனும் கேட்டால் பகிர்ந்து கொள்ளக் கூடாது எனவும் முகம் தெரியாத நண்பர்களை இணைத்து நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டாம் எனவும் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்கள்,  குறுஞ் செய்திகளையோ திறந்து பார்க்க வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறிய காவல்துறையினர், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக்கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

தாயை இழந்த சிறுமிக்கு உதவி

கடம்பராயன்பட்டியில்   ராஜேந்திரன் மனைவி நிர்மலா என்பவர் கொரோனாவால் உயிரிழந்தார். அவரது  மகள் ராஜீஸ்ரீ(13)  உடல்நிலை பாதிக்கப்பட்ட தந்தையுடன் வசித்து வந்தார். இதை அறிந்த இலுப்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று பழங்கள், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார். மேலும், சிறுமியிடம் தேவையானதை கேட்டு பின்னர் காவல்துறை மூலம் உதவிகள் செய்யப்படும் என கூறினார்.

இதையடுத்து சிறுமி வழங்கிய கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட துணை காவல் கண்காணிப்பாளர், மனு மீது உடனே நடவடிக்கை எடுக்க இலுப்பூர் வருவாய் துறையினருக்கு பரிந்துரை செய்தார். அப்போது காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments