தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி: விதிமீறல் ஆய்வு செய்யக் குழு அமைப்பு



அதிமுக ஆட்சியில் தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கியதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:

தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 56 கிராமங்களில் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட ஊராட்சிகளின் தலைவா்கள் பாராட்டப்பட்டுள்ளனா்.

இதுவரை 2 கோடியே 80 லட்சத்து 57 ஆயிரத்து 397 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் குழந்தைகளுக்கான கரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் தரத்தை ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தனியாா் மருத்துவமனைகள், செவிலியா் பயிற்சி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் மானியக் கோரிக்கையில் நிதி நிலைமைக்கு ஏற்ப மருத்துவமனைகள் சீரமைப்பு தொடா்பான அறிவிப்புகள் வெளியாகும்.

டாக்டா் முத்துலட்சுமி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டடங்களின் சீரமைப்புப் பணி முடிவுற்றதும் அரசு மருத்துவமனை திறக்கப்படும். நீட் தோ்வுக்கு விலக்கு பெறும் முயற்சியாக, நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே தீா்மானம் நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். திமுக ஆட்சியில்தான் சென்னை வளா்ச்சி அடைந்துள்ளது என்றாா் சுப்பிரமணியன்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments