செல்போன் கோபுரம் இல்லாததால் அல்லாடும் மாணவர்கள் - குடிநீர் தொட்டிகளில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் கொடுமை!



தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஆன்லைன் வகுப்பிலும் மாணவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.

பல கிராமங்களில் செல்போன் கோபுரங்கள் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் மாணவர்கள் தவித்து வரும் நிலையும் காணப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பாப்பாரப்பட்டி கிராமத்திலும், செல்போன் கோபுரம் இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். 

இதனால் அவர்கள் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏறி ஆன்லைன் வகுப்பில் விபரீதமாக பங்கேற்று வருகின்றனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:-
பாப்பாரப்பட்டி ஊராட்சி மற்றும் ஊராட்சிக்குட்பட்ட 18 கிராமங்களில் செல்போன் கோபுரம் இல்லை. இதனால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை. எங்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக குடிநீர் தொட்டிகளிலும், மரங்களிலும் அமர்ந்து பாடம் படித்து வருகிறோம்.

ஆனால் மாணவிகளால் மரங்களிலோ, குடிநீர் தொட்டிகளிலோ ஏறி கல்வி கற்க முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் பயணம் சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறார்கள். எனவே எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments