திருமயத்தில் சைபா் கிரைம் காவலா்கள் என சிறுவனை மிரட்டி பணம் பறித்த இருவா் கைது!திருமயத்தில் செல்போனில் ஆபாச படம் பார்த்த சிறுவனிடம், சைபர் கிரைம் போலீஸ் எனக் கூறி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை எப்படியோ அறிந்த கொண்ட 2 பேர் அந்த சிறுவன் பயன்படுத்திய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு, நாங்கள் சைபர் கிரைம் போலீசில் இருந்து பேசுகிறோம். ஆபாச படம் பார்ப்பது சட்டப்படி குற்றம். ஆகவே, உன் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாகவும், வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் தான் சொல்லும் கூகுள் பே நம்பருக்கு ரூ.20 ஆயிரம் பணம் அனுப்ப வேண்டும் என பேசியுள்ளனர்.

இதனால், பயந்து போன அந்த சிறுவன் தன் தந்தையிடம் வேறு காரணங்களைச் சொல்லி ரூ.20 ஆயிரம் பெற்று மர்ம நபர்கள் கொடுத்த கூகுள் பே நம்பருக்கு அனுப்பி உள்ளான். இதுகுறித்து கேள்விப்பட்ட அந்த சிறுவனின் சித்தப்பா இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டார். அதற்கு சைபர் கிரைம் போலீசார், தாங்கள் எதுவும் அவ்வாறு பணம் அனுப்ப சொல்லவில்லை என்று மறுத்தனர்.

மேலும், தங்களது சைபர் கிரைம் பெயரை சொல்லி சிறுவனை மிரட்டி பணம் பறித்தவர்களை பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி, சிறுவனை தொடர்பு கொண்ட மர்ம நபர்களின் செல்போன் எண், கூகுள் பே எண் ஆகியவற்றை வாங்கினர். பின்னர் இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கணேசன்(வயது 43), அவரது உறவினர் பிரகாஷ்(24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை திருமயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments