ஊராட்சி நிர்வாகத்தில் பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக கணவர், சகோதரர், தந்தை அல்லது இதர உறவினர்கள் தலையிட தடை! மீறினால் கடும் நடவடிக்கை!!பெண்கள் ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சி நிர்வாகத்தில் அவர்களது கணவர்கள் உறவினர்கள் தலையீடு இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளில் பெண்கள் வெற்றி பெற்று பதவியேற்றுள்ளனர். ஊராட்சி நடவடிக்கைகளில் தலைவர்கள் மற்றும் துணை தலைவர் பதவிகளில் உள்ள பெண்களின் கணவர்கள், உறவினர்கள் தலையீடு தலையீடு அதிகம் இருப்பதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளது. அதையடுத்து நிர்வாகத்தில் கணவர்கள், உறவினர்கள் தலையீடு மற்றும் நிதி ஆதாரங்களை தவறாக பயன்படுத்துதல் போன்றவைகள் நடந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்திற்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,

பார்வையில் காணும் பொருள் தொடர்பாக தங்களின் கனிவான சுவனம் ஈர்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் முடிவுற்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்று ஊராட்சி நிர்வாகம் சிறப்புற நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஊராட்சி நிர்வாகத்தில் ஆங்காங்கே நடைபெற்றதாக வருகின்ற ஒரு சில நிகழ்வுகள் ஊராட்சி நிர்வாகத்திற்கு சிறப்பு சேர்ப்பதாக இல்லை.

தமிழக அரசு, அரசாணை (நிலை) எண். 60, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நாள் 23.05.2016-ன் வழி மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிக்களுக்கான இட ஒதுக்கீட்டினை 33.3 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி உத்தரவிட்டதோடு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் இந்த விகிதாசாரத்தின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதத்திற்கு அதிகமானோர் பெண் பிரதிநிதிகளாக உள்ளனர். 

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ல் கிராம ஊராட்சி தலைவர், ஒன்றிய குழுத் தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, கிராம ஊராட்சி தலைவருக்கு ஊராட்சியின் தலைவர், என்ற பொறுப்போடு அந்த கிராம ஊராட்சியின் செயல் அலுவலர் என்ற பொறுப்பையும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் மூலம் வழங்கியுள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம், சிறப்பானதாக அமையும் வகையிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஊராட்சி நிர்வாகம் பற்றி அறிந்துகொள்ளும் வகையிலும் பெண் பிரதிநிதிகள் ஆற்றல் மேம்பாடு அடையும் வகையிலும் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தால் காணொலி காட்சிகள் மூலம் பலவிதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுள் பெரும்பாலனோர் கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடத்திற்கு புதியவர்களாக இருப்பதன் காரணமாக ஊராட்சி நிர்வாகத்தில் அவர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்தும், கிராம ஊராட்சிக் கூட்டங்கள் நடத்துவது, ஊராட்சிக் கணக்குகள் மற்றும் ரொக்கப் புத்தகம் பராமரித்தல் மற்றும் மத்திய, மாநில அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சூழ்நிலையில் ஒரு சில ஊராட்சி அமைப்புகளில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் கணவர், சகோதரர். தந்தை அல்லது இதர உறவினர்களின் குறுக்கீடுகள் ஊராட்சி நிர்வாகத்தில் அதிக அளவில் இருப்பதாக அரசின் கவனத்திற்கும், இவ்வியக்ககத்தின் கவனத்திற்கும் கொண்டு வரப்பெற்றுள்ளது. 

குறிப்பாக ஒரு சில நிகழ்வுகளில் இவ்வாறான உறவினர்கள் ஊராட்சி நிதி நிர்வாகத்தில் கூட தலையிடுவதாகவும் புகார்கள் வரப்பெற்றுள்ளன. இது போன்ற நிகழ்வுகள் சட்டத்திற்கு புறம்பானவை என்பதோடல்லாமல், இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் 73-வது சட்டத் திருத்தம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன் படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பகிர்வுகளை அவமதிக்கின்ற செயலாகும்.

எனவே, பெண் பிரதிநிதிகள் தலைமை பதவி வகிக்கின்ற மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மூன்றடுக்கு ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற முறையில் கண்காணித்திடுமாறும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், பெண் பிரதிநிதிகளின் உறவினர்கள் நிர்வாகத்தில் தலையிடுகிறார்களா என்பதனை கண்காணித்திடும் பொருட்டு கீழ்காணும் அலுவலர்களை பொறுப்பாக்கி உரிய உத்தரவுகளை உடனடியாக பிறப்பித்திடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

கிராம ஊராட்சி - மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
வட்டார ஊராட்சி - வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி)
மாவட்ட ஊராட்சி - செயலர், மாவட்ட ஊராட்சி.

இவ்வாறாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments