திருச்சி விமான நிலையத்தில் மீண்டும் பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பு
கொரோனாவின் 2-வது அலை அனைத்து துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் போக்குவரத்து துறை முற்றிலுமாக முடங்கியது.

 
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பஸ் மற்றும் ரெயில் சேவைகள் தடைபட்டன. சர்வதேச விமானங்கள் இயக்கப்படவில்லை. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

இதனால் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மே, ஜூன் மாதங்களில் பயணிகள் போக்குவரத்து கணிசமாக குறைந்தது. மே மாதத்தில் 15 ஆயிரத்து 27 பேரும், ஜூன் மாதத்தில் 17 ஆயிரத்து 626 பேர் மட்டுமே திருச்சிக்கு விமானம் மூலம் வந்து சென்றுள்ளனர்.

அதே நேரம் நடப்பு ஆண்டில் ஜனவரியில் 46 ஆயிரத்து 258 பேரும், பிப்ரவரியில் 41 ஆயிரத்து 265 பேரும், மார்ச் மாதத்தில் 47 ஆயிரத்து 947 பேரும் பயணம் செய்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் முதல் திருச்சி விமான நிலையம் மெல்ல மீளத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜூலையில் 24 ஆயிரத்து 129 பேரும், கடந்த ஆகஸ்டு மாதத்தில் 33 ஆயிரத்து 23 பேரும் பயணம் செய்திருக்கிறார்கள். இதில் 80 சதவீத பயணிகள் துபாய், சார்ஜா, தோகா, அபுதாபி, மஸ்கட், குவைத் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் மூலம் வந்து சென்றிருக்கிறார்கள்.

தற்போது சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கும் விமான சேவை தொடங்கியுள்ளது. இதன்மூலம் அடுத்துவரும் மாதங்களில் பயணிகள் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என விமான நிலைய ஆணைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்கடங்காமல் இருப்பதால் சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகை புத்துயிர் பெறவில்லை. மேலும் இதுபற்றி திருச்சி டிராவல் ஏஜெண்டுகள் கூறும்போது, மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி போடும் பணியை இன்னும் வேகப்படுத்த வேண்டும். 3-வது அலை தாக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். சமீபத்தில் அபுதாபி நாடு சர்வதேச சுற்றுலா பயணிகள் 2 முறை தடுப்பூசி போட்டு இருந்தால் தனிமைப்படுத்த தேவையில்லை என தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும். இந்த நடவடிக்கையை மற்ற நாடுகளும் பின்பற்றினால் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து உயரும் என்றனர்.

திருச்சி விமான நிலையத்தின் சரக்கு ஏற்றுமதியை பொறுத்தமட்டில் பெரிய அளவு பாதிப்பு இல்லை. திருச்சியில் இருந்து சராசரியாக மாதந்தோறும் 350 டன் சரக்கு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த மே மாதத்தில் அது 250 ஆக குறைந்தது. ஆனால் ஜூன் மாதம் 350, ஜூலையில் 350, கடந்த ஆகஸ்டில் 387.4 டன் சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில் 409 டன் சரக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. அதேபோன்று நடப்பு மாதத்திலும் உயர வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments