மல்லிப்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படுமா?
மல்லிப்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படுமா? - 

தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 45 கிலோ மீட்டர் நீளத்தில் வங்க கடலின் கடற்கரை அமைந்துள்ளது. இதில், 27 மீனவ கிராமங்கள் உள்ளன. மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் மீன்பிடித் தளங்கள் அமைந்துள்ளன.

இதில், மல்லிப்பட்டினம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் புதுப்பட்டினம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு முஸ்லிம் மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள கடற்கரைப் பகுதி கடந்த சில மாதங்களாக பிரபலமடைந்து வருகிறது. அமைதியான சூழல், கடற்காற்று, அருகில் உள்ள தென்னந்தோப்புகளின் நிழல், 2 கி.மீ தொலைவுக்கு வெண்ணிற மணற்பரப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாத அலைகள் என அனைவரையும் இந்த கடற்கரை வசீகரித்து வருகிறது. இதனால், விடுமுறை நாட்களில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கார், வேன்களில் ‘தஞ்சாவூர் மாவட்ட பீச்' எனப்படும் புதுப்பட்டினம் கடற்கரைக்கு வருகின்றனர். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என பலரும் கடலில் இறங்கி குளித்தும் மகிழ்கின்றனர். மேலும், குளிர்பானக் கடைகள், பொம்மைக் கடைகள் என ஏராளமான திடீர் கடைகள் முளைத்து வருகின்றன. ஆனால், இங்கு பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாதது பெருங்குறையாக உள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கடற்கரை செல்லும் 2 கி.மீ சாலை சேதமடைந்து குண்டுங்குழியுமாக உள்ளது. எனவே சாலையை சீரமைத்து தர வேண்டும். மின்விளக்குகளை பொருத்த வேண்டும். கடற்கரையை சுத்தம் செய்து, நிழற்குடை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.

மேலும், குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா உள்ளிட்டவற்றை அமைத்து புதுப்பட்டினம் கடற்கரையை சுற்றுலாத் தலமாக அறிவித்து, மேம்படுத்த வேண்டும்.

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால், தேவையான போலீஸாரை பணியமர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேராவூரணியைச் சேர்ந்த அப்துல்லா கூறும்போது, ‘‘கடற்கரையில் கடைகள் அமைப்பது தொடர்பாக உள்ளூர் ஜமாத்தாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படும் சூழல் உள்ளதால், அங்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கடைகள் அமைக்க வரைமுறையை ஏற்படுத்த வேண்டும். கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர்கள் கூறும்போது, ‘‘புதுப்பட்டினம் கடற்கரையை சுற்றலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நாங்கள் கள ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்வோம்’’ என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments