புதுக்கோட்டை மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 11 ஆசிரியர்கள் தேர்வு! முதன்மை கல்வி அதிகாரி தகவல்!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதில் தொடக்க, நடுநிலை, மெட்ரிக், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் விருது வழங்கப்படுகிறது.

அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், கே.வி.கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் செல்வக்குமார், லெக்கணாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டனி, மாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராமர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல காயாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார், மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை ஷோபா, கவரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை மு.மீனா, ஆவணத்தான்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, செட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை லீமா ரோஸ்லிண்ட், மேலூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை கிறிஸ்டி, புதுக்கோட்டை கற்பக விநாயகர் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர் ஷானுரிஜ்வான் என மொத்தம் 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் புதுமையான கற்பித்தல், கல்விக்கான செயலிகள் வடிவமைத்தல், பள்ளிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல், மாணவர்கள் சேர்க்கையை உயர்த்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டவர்கள் ஆவர். மேற்கண்ட தகவலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments