மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியின்றி தேர்வானார் தி.மு.க. வேட்பாளர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா!



மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க. வேட்பாளர் மு.முகமது அப்துல்லா போட்டியின்றி தேர்வாகியுள்ளார். அதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக மாநிலங்களவை உறுப்பினர் (எம்.பி.) முகமது ஜான் மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த காலியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஆகஸ்டு 24-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி முடிவடைந்தது.

இந்த தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியும், தமிழக சட்டசபை செயலாளருமான கி.சீனிவாசனிடம் சுயேச்சை வேட்பாளர்கள் ந.அக்னி ஸ்ரீராமச்சந்திரன், கு.பத்மராஜன், கோ.மதிவாணன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
அரசியல் கட்சி சார்பில் தி.மு.க. வேட்பாளர் புதுக்கோட்டையை சேர்ந்த மு.முகமது அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 4 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் 1-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் அதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், தி.மு.க. வேட்பாளர் மு.முகமது அப்துல்லாவின் வேட்புமனு செல்லத்தக்கது என்று அறிவிக்கப்படுகிறது. சுயேச்சை வேட்பாளர்களான ந.அக்னி ஸ்ரீராமச்சந்திரன், கு.பத்மராஜன், கோ.மதிவாணன் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மு.முகமது அப்துல்லாவின் வேட்புமனு மட்டுமே செல்லத்தக்கதாக இருந்தது. போட்டிக்களத்தில் வேறு யாரும் இல்லை. வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கு கடைசி நாள் 3-ந் தேதியாகும் (நேற்று). வேட்புமனுவை திரும்பப்பெறும் நேரமான நேற்று பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு திரும்பப்பெறப்படவில்லை என்பதால், தி.மு.க. வேட்பாளர் மு.முகமது அப்துல்லா போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், ‘தி.மு.க.வைச் சேர்ந்த மு.முகமது அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினராக முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை மு.முகமது அப்துல்லாவிடம் நேற்று சட்டசபை செயலாளர் அலுவலகத்தில் வைத்து சீனிவாசன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு மற்றும் அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments