புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் இயங்கிய கொரோனா சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை நிறுத்தம்: வேறு இடத்திற்கு மாற்ற முடிவு!புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இயங்கிய கொரோனா சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை நிறுத்தப்பட்டது. வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அலோபதி மருத்துவத்துடன் சித்த மருத்துவ சிகிச்சை மையமும் தனியாக தொடங்கப்பட்டது. அந்தவகையில் கொரோனா முதலாவது அலையின் போது புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

இதில் பாரம்பரிய உணவு முறைகளுடன், சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டன. முதல் அலையில் கொரோனா தொற்று பாதித்த 508 பேர் வரை சிகிச்சை பெற்றனர். இதேபோல 2-வது அலையில் 161 பேர் வரை சிகிச்சை பெற்றனர். சிகிச்சையின் போது ஒரு நோயாளி கூட இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கல்லூரிகள் இன்று (புதன்கிழமை) முதல் திறக்கப்படுகிறது. இதையொட்டி அரசு மகளிர் கலைக்கல்லூரியிலும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதனால் கல்லூரி வளாகத்தில் உள்ள கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் தற்போது இதில் சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளன. சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட படுக்கைகள் மற்றும் உபகரணங்களை அப்புறப்படுத்த சித்த மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிகிச்சை நிறுத்தப்பட்ட நிலையில் அதனை ஓரிரு நாட்களில் அகற்றப்படும் என்றனர். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதால் இனி சித்த மருத்துவ சிகிச்சை மையத்திற்கு வேறு கட்டிட வசதி இடம் பார்க்கப்படும் என தெரிகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments