ஊராட்சி நிர்வாகத்தில் கணவர் தலையீடு - நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி மீது நடவடிக்கை பாயும் என வட்டார வளர்ச்சி அலுவலர் எச்சரிக்கை!!



நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் பெண் ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தில் அவருடைய கணவர் தலையீடு இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளில் பெண்கள் வெற்றி பெற்று பதவியேற்றுள்ளனர். ஊராட்சி நடவடிக்கைகளில் தலைவர் பதவியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தலையீடு அதிகம் இருப்பதாக வட்டார வளர்ச்சி நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளது. அதையடுத்து நிர்வாகத்தில் கணவர்களின் தலையீடு இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் ஊராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
கடிதக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பார்வை 1-இல் காணும் பொதுமக்கள் மனுவில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டாணிபுரசகுடி ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.ரா.சீதாலெட்சுமி என்பவரின் பணிகளில் அவரது கணவர் தலையிடுவதாக தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, சுதந்திரமாக பெண் தலைவர்கள் பணி செய்ய வேண்டும் என்றும் அவரது பணிகளில் அவருடைய கணவர் தலையிடக் கூடாது என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், புதுக்கோட்டை அவர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தும் நாட்டாணிபுரசகுடி ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவரின் பணிகளில் அவரது கணவர் தலையிடுவதாக தொடர்ந்து விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. இதற்கு மேலும் தங்களது பணிகளில் தங்கள் கணவரது தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் இது போன்ற மனுக்கள் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறாக கடிதக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments