மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்வாகும் தி.மு.க. வேட்பாளர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா!சுயேட்சை வேட்புமனுக்கள் தள்ளுபடியான நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க. வேட்பாளர் மு.முகமது அப்துல்லா போட்டியின்றி தேர்வாகிறார்.

தமிழக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த காலியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஆகஸ்டு 24-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி முடிவடைந்தது.

இந்த தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியும், தமிழக சட்டசபை செயலாளருமான கி.சீனிவாசனிடம் சுயேச்சை வேட்பாளர்கள் ந.அக்னி ஸ்ரீராமச்சந்திரன், கு.பத்மராஜன், கோ.மதிவாணன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.அரசியல் கட்சி சார்பில் தி.மு.க. வேட்பாளர் புதுக்கோட்டையை ேசர்ந்த மு.முகமது அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 4 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் நேற்று (1-ந் தேதி) வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதுகுறித்து கி.சீனிவாசன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்த இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் 1-ந் தேதி (நேற்று) காலை 11 மணிக்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், தி.மு.க. வேட்பாளர் மு.முகமது அப்துல்லாவின் வேட்புமனு செல்லத்தக்கது என்று அறிவிக்கப்படுகிறது.

ந.அக்னி ஸ்ரீராமச்சந்திரன், கு.பத்மராஜன், கோ.மதிவாணன் ஆகிய 3 சுயேச்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மு.முகமது அப்துல்லாவின் வேட்புமனு மட்டுமே செல்லத்தக்கதாக உள்ளது. போட்டிக் களத்தில் வேறு யாரும் இல்லை.

வேட்புமனுவை திரும்பப்பெற வேண்டுமானால் 3-ந் தேதி (நாளை) பிற்பகல் 3 மணிக்குள், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விலகல் கடிதம் அளிக்க வேண்டும். தி.மு.க. வேட்பாளர் விலகல் கடிதம் கொடுப்பதற்கான முகாந்திரம் இல்லாத நிலையில், இந்த இடைத்தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும்.

தற்போதுள்ள நிலவரப்படி, தி.மு.க. வேட்பாளர் மு.முகமது அப்துல்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனவே 13-ந் தேதி இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்காது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments