அறந்தாங்கி நகரில் இயங்காமல் காட்சி பொருளாக நிற்கும் சிக்னல்கள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி





புதுக்கோட்டை மாவட்டத்தின் 2வது பெரிய நகராக அறந்தாங்கி நகரம் விளங்கி வருகிறது. அறந்தாங்கி நகருக்குள் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களும், ஆயிரக்கணக்கான 2 சக்கர வாகனங்களும் வந்து செல்கின்றன.

 அறந்தாங்கி நகருக்குள் வந்து செல்லும் வாகனங்களால் பல இடங்களில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அறந்தாங்கி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியகடைவீதி, செக்போஸ்ட், கட்டுமாவடி முக்கம், அண்ணாசிலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டது. தனியார் விளம்பர நிறுவனம் மூலம் அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல்கள் இயக்கப்படவில்லை. இதனால் அறந்தாங்கி நகரில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்கள் காட்சி பொருளாக இன்றும் சாலை ஓரங்களில் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறந்தாங்கி கட்டுமாவடி முக்கத்தில் புதிதாக போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. சிக்னல் அமைக்கப்பட்ட சில நாட்கள் சிக்னல் விளக்குகள் தாமாகவே எரிந்து அணைந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சிக்னல்களில் உள்ள மஞ்சள் விளக்கு மட்டும் தொடர்ந்து எரிந்து வருகிறது. இன்னும் முழுமையாக இந்த சிக்னல்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. கட்டுமாவடி முக்கத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல்கள் இயங்காமல் உள்ள நிலையில் தற்போது புதிதாக எதற்காக சிக்னல்கள் அமைக்கப்பட்டது எனத் தெரியவில்லை. அறந்தாங்கி நகரில் நாள்தோறும் வந்து செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தி அனுப்பினால் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். நகரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் பராமரிப்பு இல்லாமல் உள்ள சிக்னல்களை சீரமைத்து, அந்த இடங்களில் போக்குவரத்து காவல்துறையினரை பணியமர்த்தி, சிக்னல்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், அறந்தாங்கி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கலாம்.

மேலும் சாலை சந்திப்புகளில் உள்ள சிக்னல்களில் காவலர்கள் பணியில் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் வாகன ஓட்டுனர்கள் முகக்கவசம், தலைக்கவசம் போன்றவற்றை கட்டாயம் அணிந்து வருவார்கள். இருசக்கர வாகன ஓட்டுனர்கள் தலைக்கவசம் அணிவதால் விபத்து நேரிட்டால் கூட உயிர் தப்ப வாய்ப்பாக அமையும். மேலும் சிக்னல்களில் போலீசார் பணியில் இருப்பதால், இருசக்கர வாகனங்களில் சென்று செயின் பறிக்கும் கொள்ளையர்களை எளிதில் அடையாளம் கண்டு கைது செய்யவும் வாய்ப்பாக இருக்கும்....

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments