பருவமழை பாதிப்பை தடுக்க அனைத்து மழைநீர் வடிகால்களை தூர்வார வேண்டும்! தமிழக அரசு உத்தரவு!!



பருவமழையால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மழைநீர் வடிகால்களை தூர்வார வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திட வரும் 20-ந்தேதி (இன்று) முதல் 25-ந்தேதி வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாம் ஆக அறிவித்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

அறிவுரைகள்

இதனை செய்ய ஏதுவாக வழங்கப்படும் அறிவுரைகள் வருமாறு:-

* மழைநீர் வடிகால்கள் அனைத்தையும் பெரிய மழை நீர் வடிகால், நடுத்தர மழை நீர் வடிகால் மற்றும் சிறிய மழைநீர் வடிகால் என வகைப்பாடு செய்யவேண்டும்.

* பெரிய மழைநீர் வடிகால்களில் சேகரமாகியுள்ள வடிகால் படிவுகளை அகற்றுவதற்கு பொக்லைன், ஜெட்ராடிங் எந்திரம், ஜே.சி.பி. எந்திரம் மற்றும் தேவைப்படும் இதர எந்திரங்களை போதுமான அளவில் ஏற்பாடு செய்து பயன்படுத்த வேண்டும்.

* நடுத்தர மற்றும் சிறிய மழை நீர் வடிகால்களில் உள்ள படிவுகளை அகற்றுவதற்கு உள்ளாட்சிகளில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களையும் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.

மழைநீர் தேக்கம்

* பணியாளர்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக அணிந்து பணி செய்வதற்கு அறிவுறுத்த வேண்டும்.

* இந்த செயல் திட்ட காலத்தில் தவிர்க்க முடியாத காரணங்களை தவிர அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் விடுப்பில் செல்லக்கூடாது.

* சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் பொறியியல் பிரிவு மூலம், தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

* பணி நடைபெறும்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவேண்டும்.

பணிகள் தொடக்கம்

* ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்கள் தவிர்த்து, இதர மாவட்டங்களில் 20-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த பணிகளை தொடங்கி வைக்கவேண்டும்.

* இந்த திட்டத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூய்மைப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவது தவிர்க்கப்படுவதுடன், கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்களில் தேங்கி நிற்கும் நீரினால் ஏற்படக்கூடிய நோய் தொற்று தடுக்கப்படும். மேலும் நகரின் அழகும் மேம்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments