‘காக்கி கவசங்கள்’ குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் புதிய முயற்சி !திருச்சி மத்திய மண்டலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பதற்குத் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு புதிய முயற்சியை மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மேற்கொண்டுள்ளார்.

அது குறித்து அவர் தெரிவித்ததாவது; “மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்று தாக்குதல் காரணமாகப் பெற்றோரில் ஒருவரோ அல்லது பெற்றோர் இருவரையுமே இழந்த குழந்தைகள் விவரம் சேகரிக்கப்பட்டது. 

அந்த குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாவலராகச் செயல்பட விருப்பம் தெரிவிக்கும் ஒரு காவலரை நியமிக்கும் ‘காக்கி கவசங்கள்’ என்ற புதிய செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் பெற்றோரை இழந்து 65 குழந்தைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்யும் பணியைச் செய்வதற்கு விருப்பமுள்ள காவலர்களின் விவரங்களும் தற்போது சேகரிக்கப்பட ஆரம்பித்துள்ளன. 

இதற்கு விருப்பம் தெரிவித்த 55 காவலர்களிடம் தலா ஒரு குழந்தையின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியானது காவல் நிலையங்களில் பெண்கள் உதவிக் குழுவில் பணியாற்றும் காவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் காவலர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அந்த குழந்தைகளை நேரில் சந்தித்து அவர்களது பாதுகாப்பு தொடர்பான விவரங்களை உறுதிப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதன் தொடக்கமாகக் கடந்த சனிக்கிழமை அன்று கண்டெடுக்கப்பட்ட 65 குழந்தைகளும் காவலர்களால் நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பு குறித்து கேட்கப்பட்டது. குழந்தைகள் கல்வியை தடையின்றி தொடர்வதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்புக்கென தனித்தனியே நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் பணியிட மாறுதலில் சென்றாலும் கூட அந்த குழந்தையின் பாதுகாப்பு தொடர்பான பணிகளைத் தொடர்ந்து கண்காணிப்பது வாரம் ஒருமுறை நேரில் சந்தித்து அல்லது தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக” என ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments