புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை!புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று (புதன்கிழமை) திறக்கப்படுவதையொட்டி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப் படும்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் இன்று (புதன்கிழமை) முதல் திறக்கப்படுகிறது. பள்ளிகளில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற உள்ளது.

மாவட்டத்தில் 219 அரசு பள்ளிகள், 130 தனியார் பள்ளிகள் என மொத்தம் 349 பள்ளிகளில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வருகை தர உள்ளனர். பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல கல்லூரிகளில் இளங்கலை 2 மற்றும் 3-ம் ஆண்டு வகுப்பு மாணவர்களுக்கும், முதுகலை மாணவர்களுக்கும் வகுப்புகள் இன்று முதல் நேரிடையாக நடைபெற உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். கல்லூரிகளில் உள்ள வளாகம் மற்றும் வகுப்பறைகள் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் கவிதாராமு நேற்று திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி, கல்வி அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதேபோல கல்லூரிகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அன்னவாசல் பள்ளிகளில், கொரோனா தடுப்பு முன்னேற்பாடு பணிகளை பள்ளிகளின் இணை இயக்குனர் செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக அன்னவாசல் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆய்வு செய்தார். அப்போது அவர் பள்ளிக்கு சுழற்சி முறையில் வரும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்கள் எண்ணிக்கை, பள்ளிகளில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சானிடைசர், சோப்பு போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டார். ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா? என்று கேட்டறிந்தார். 

ஆய்வின்போது இலுப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் சண்முகநாதன், பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உடன் இருந்தனர்.

ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா? என்று தாசில்தார் வெள்ளைச்சாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் உள்ள கொடும்பாளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகள் இணை இயக்குனர் செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டதோடு தனது செல்போனில் சில மாணவர்களை தொடர்பு கொண்டு அது தொடர்பாக கேட்டறிந்தார். 

அதனைத்தொடர்ந்து விராலிமலை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் இலுப்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டையில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான மீளாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் இணை இயக்குனர் செல்வராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், பள்ளி திறப்பின்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments