பணம் கொடுத்து படிவம் வாங்க வேண்டாம்: முதலமைச்சர் தனிப்பிரிவில் வெள்ளைத்தாளில் மனு அளித்தாலே போதும் என தமிழக அரசு தகவல்!!



முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் வெள்ளைத்தாளில் எழுதி மனு அளித்தாலே போதும் என்றும் பணம் கொடுத்து படிவம் வாங்கி அதில் எழுதிக்கொடுக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை தலைமைச்செயலகத்தில் செயல்பட்டு வரும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்களிடம் இருந்து பெறபடும் மனுக்கள், தொடர்புடைய மாவட்டங்கள் அல்லது துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமீபகாலங்களில், இலவச வீடு ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி தினமும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளித்து வருகின்றனர்.

இப்படி முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்படும் பெரும்பாலான மனுக்கள் ஒரு குறிப்பிட்ட படிவத்தில்தான் அளிக்கப்பட வேண்டும் என்ற தவறான வதந்தி மக்களிடையே சில தனிப்பட்ட நபர்களால் பரப்பப்பட்டு, அதை நம்பி மனுக்களை அளிக்க வரும் பெரும்பாலான பொதுமக்கள் குறிப்பிட்ட படிவங்களை பணம் கொடுத்து வாங்கி மனுக்களை அளித்து வருவதாகவும் செய்திகள் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க எவ்வித குறிப்பிட்ட படிவமும் அரசால் பரிந்துரைக்கப்படவில்லை. மேலும், மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள், ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் கோரிக்கைகளை எழுதி தேவைப்பட்டால், உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அளித்தாலே போதுமானது.

முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் பல்வேறு வழிகளில் பெறப்படும், அதாவது, (தபால் அல்லது இணையதளம்) ( www.cmcell.tn.gov.in ), முதல்-அமைச்சர் உதவி மையம் (cmhelpline.tnega.org) மற்றும் மின்னஞ்சல் ( cmcell@tn.gov.in) மூலம் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க ஒரே மாதிரியான நடைமுறையே பின்பற்றப்படும்.

எனவே மக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக குறிப்பிட்ட படிவத்தில்தான் மனுக்களை அளிக்க வேண்டும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம். பணம் கொடுத்து படிவங்களை வாங்க வேண்டாம்.

மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில், தினமும் நேரடியாக மனுக்களை அளிப்பதற்காக பொதுமக்கள் கூடுவதை தவிர்த்து, இணையவழி சேவைகளை பயன்படுத்தி மனுக்களை அளித்து பயன் பெறவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments