தேர்தலுக்காகச் செலவழிக்கும் பணத்தை உள்ளாட்சிப் பணத்தில் இருந்து எடுத்தால் நடவடிக்கை: பொதுமக்கள் எச்சரிக்கை போஸ்டர்






தேர்தலுக்காகச் செலவழிக்கும் பணத்தை ஊராட்சிப் பணத்தில் இருந்து எடுக்க நினைத்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் தெரிவிக்கப்படும் என மாதனூர் இளைஞர்கள், கிராமத்தில் ஆங்காங்கே டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அடுத்த மோதகப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தேர்தலில் போட்டியிடுபவர்களுக்குச் சில நிபந்தனைகளை விதித்து அப்பகுதியின் முக்கிய இடங்களில் டிஜிட்டல் பேனர் மூலம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர்.

அந்த டிஜிட்டல் பேனரில் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், மாதனூர் ஒன்றியம், மோதகப்பல்லி ஊராட்சியில் தலைவர் பதவி, வார்டு கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்குப் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் அன்பான அறிவிப்பு என்னவென்றால், ஊரக ஊராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன், தேர்தலில் செலவு செய்த பணத்தை ஊராட்சியின் வளர்ச்சிக்கு வரும் பணத்தில் இருந்து எடுத்து விடலாம் என நினைத்து யாரும் தேர்தலில் போட்டியிட வேண்டாம்.

கிராம சபைக் கூட்டங்களில் மோதகப்பல்லி ஊராட்சி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு ஊராட்சியின் வரவு, செலவுக் கணக்கைக் கேட்போம்.

அப்போது, நீங்கள் அளிக்கும் வரவு - செலவு கணக்கு மற்றும் தகவல்கள் சரியானவைதானா? என்ற விவரத்தை ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்’ படி சரிபார்ப்போம்.

அதில், ஏதேனும் ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டால் ஊழல் செய்தவரின் படத்துடன் சமூக வலைதளங்களில் தகவல் வெளியிடுவதுடன், தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கும் புகார் அளிப்போம்.''




இவ்வாறு பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மோதகப்பல்லி ஊராட்சி இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்ட இதுபோன்ற டிஜிட்டல் பேனர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகின்றன. இதனால், தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments