புதுக்கோட்டை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!



வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் நிலைக்கொண்டு இருக்கும் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை) சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும், 20-ந் தேதி (புதன்கிழமை) தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments